அனைத்து வகையான பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளும் வகையிலான வெற்றி பயண திட்டம் அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தவெக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் நிலையில், அக்கட்சி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாக வெற்றிப் பயணம் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல பெண் கல்வி, வேலை வாய்ப்பு, வணிகம், மருத்துவம், சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் சுதந்திரமாக பங்கேற்கும் வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது. மகளிரின் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதாரம், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது. தற்போது செயலில் உள்ள மகளிர் இலவச பயணத்திட்டத்தில் நகர பேருந்துகளில் 40 கிலோமீட்டருக்குள் பயணம் என்ற விதி உள்ளது. மற்ற வகையான பேருந்துகளில் இலவச பயண திட்டம் அனுமதிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் வசிக்கும் மகளிர் போக்குவரத்தால் எந்த வாய்ப்பையும் இழக்கக்கூடாது என்ற சமூக நீதி சிந்தனையில் இந்த அரசு உறுதியாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மகளிர் கட்டணமில்லா பயணத்திட்டத்தை விரிவுப்படுத்தும் வகையில் அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் வெற்றிப் பயண திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, எக்ஸ்பிரஸ்,எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். மாவட்டங்களிடையே பயணம் மேற்கொள்ள புறநகர், மலைப்பகுதிகளில் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ளலாம்.

இதில் வருமான வரம்பு உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இந்த திட்டம் இதர சேவைகளில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Source: Read Full Article