Tamil Nadu River Sand Sale: தமிழகத்தில் புதிய மணல் குவாரிகள் திறப்பது தாமதமாகியுள்ள நிலையில், தடுப்பணைகளில் சேர்ந்துள்ள ஆற்று மணலை விற்பனை செய்ய கனிம வளத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குவாரிகள் திறப்பதில் தாமதம்

கடந்த 2023-இல் அமலாக்கத் துறை வழக்கு காரணமாக, ஆற்று மணல் குவாரிகள் மூடப்பட்டன. இதன் பின், புதிதாக மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், தி.மு.க. ஆட்சி காலத்தில் புதியதாக குவாரிகள் திறக்க, 30 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் பெறப்பட்ட நிலையில், குவாரிகள் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், ஆற்று மணல் குவாரிகள் திறப்பதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதற்கிடையே, 'எம்.சாண்ட்' தயாரிப்பு முறைகேடுகளை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், எம்.சாண்ட் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தடுப்பணை மணலை விற்பனை செய்ய முடிவு

தடுப்பணைகளில் படிந்திருக்கும் ஆற்று மணலை கட்டுமான பணிகளுக்கு வழங்குவதற்கான வழி முறைகளை, அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில், தடுப்பணைகளில் தேங்கியுள்ள மணல் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

ஒருங்கிணைந்த நல சம்மேளனம் கருத்து

இது குறித்து, தமிழக மணல், 'எம் சாண்ட்' லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனத் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் கூறியதாவது: ஆறுகளின் தடுப்பணைகளில் தேங்கியுள்ள மணலை, 3 அடி ஆழத்துக்கு எடுப்பதால், நீர் தேங்கும் திறன் அதிகரிக்கும். ஒவ்வொரு தடுப்பணையிலும், 3 முதல் 5 கி.மீ., வரை மணல் படிந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில் மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு ஏற்படாத இடங்களில், சுற்றுச்சூழல் அனுமதியுடன் மணல் எடுக்கலாம். இதில், 2.47 ஏக்கர் பரப்பளவில், 10,000 கன மீட்டர் அளவுக்கு மணல் எடுக்க வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்பாடுகளுடன் எடுப்பதற்கு அனுமதித்தால், எம் சாண்ட் பயன்பாடு படிப்படியாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Read Full Article