Official WhatsApp number to report corrupt police: காவல்துறையில் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் உறுதிப்படுத்தும் வகையில், லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடும் காவல்துறையினர் மீது பொதுமக்கள் நேரடியாக புகார் அளிப்பதற்காக பிரத்யேக வாட்ஸ்அப் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ஊழலற்ற காவல்துறையை உருவாக்குவதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த புதிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

உள்கண்காணிப்பு பிரிவு (Internal Vigilance Cell) உருவாக்கம்

காவல்துறையில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' (Internal Vigilance Cell) எனப்படும் உள்கண்காணிப்புப் பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. காவல் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் காவலர்களின் ஊழல், முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனமான செயல்பாடுகள் தொடர்பாக பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி இந்த உள்கண்காணிப்புப் பிரிவுக்கு நேரடியாகப் புகார் தெரிவிக்கலாம்.

புகார்களுக்கு பிரத்யேக வாட்ஸ்அப் எண்கள்

பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிதாகவும் விரைவாகவும் அனுப்பும் வகையில் மண்டலம் மற்றும் மாவட்ட வாரியாக வாட்ஸ்அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன:

* சென்னை மாநகரம் - 78717 23000

* தாம்பரம் - 63745 14428

* ஆவடி - 98400 18110

* காஞ்சிபுரம் - 99400 31700

* செங்கல்பட்டு - 95007 79100

* திருவள்ளூர் - 94981 81359

புகார்தாரர்களின் ரகசியம் காக்கப்படும்

இந்த வாட்ஸ்அப் எண்கள் மூலம் வரப்பெறும் புகார்கள் தொடர்பாகத் தகவல் அளிக்கும் புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறை உறுதியாக உள்ளது. புகாரளிப்பவர்களின் பெயரோ அல்லது பிற அடையாளங்களோ முற்றிலும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் கண்காணிப்பில் நடவடிக்கை

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் மீது நியாயமான, பாரபட்சமற்ற மற்றும் உரிய காலக்கெடுவுக்குள் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறதா என்பதை டி.ஜி.பி. முதல் மாவட்ட எஸ்பி வரையிலான உயர் காவல் துறை அதிகாரிகள் நேரடியாகக் கண்காணிப்பார்கள். எனவே, காவல்துறையினரின் அத்துமீறல்கள் குறித்து பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி தைரியமாகப் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article