சென்னை நகரின் மிக முக்கிய போக்குவரத்து பாதைகளில் ஒன்றாக திகழ்வது சர்தார் படேல் சாலையாகும். 60 அடி அகலம் கொண்ட இந்தச் சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. குறிப்பாக ஈ.சி.ஆர், ஓ.எம்.ஆர் மற்றும் அடையாறு பகுதிகளிலிருந்து கிண்டி நோக்கியும், சைதாப்பேட்டையிலிருந்து அடையாறு, ஓ.எம்.ஆர் நோக்கியும் செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சாலையையே பிரதானமாகப் பயன்படுத்துகின்றன. இதில் ஆளுநர் மாளிகை நுழைவாயில் பகுதியில் இருந்து மத்திய கைலாஷ் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவது வாடிக்கையாக உள்ளது. இதனிடையே, கோட்டூர்புரம் செல்லும் அணுகுசாலை ஒரே ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு குறுகலாக இருப்பதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண அகலப்படுத்தும் பணிகள்

இந்த நெரிசலைக் குறைக்கும் விதமாக, ஆளுநர் மாளிகை நுழைவாயில் தொடங்கி ஐ.ஐ.டி. நுழைவாயில் வரையிலான 1.6 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையை 100 அடி அகலமாக விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. ரூ.48 கோடி மதிப்பில் நடைபெறும் இந்தப் பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, சுமார் 370 மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகைக்கு எதிரில் உள்ள சாலை மற்றும் புற்றுநோய் மருத்துவமனை மேம்பால அணுகுசாலை ஆகிய பகுதிகள் ஏற்கனவே அகலப்படுத்தப்பட்டு விட்டதால், தற்போது அங்கே நெரிசலின்றி வாகனங்கள் சீராகச் சென்று வருகின்றன.

பாரம்பரிய அழகோடு அமையும் புதிய நடைமேம்பாலம்

முழுச் சாலையும் அகலப்படுத்தப்பட்ட போதிலும், அண்ணா பல்கலைக்கழக நுழைவாயிலில் உள்ள சிக்னல் பகுதியில் தொடர்ந்து வாகன நெரிசல் ஏற்படுவது கண்டறியப்பட்டது. இதற்குத் தீர்வாக, அந்தச் சிக்னல் பகுதியில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் பிரம்மாண்ட நடைமேம்பாலம் ஒன்றைக் கட்ட நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நடைமேம்பாலம் 100 அடி நீளமும், 18 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்படவுள்ளது.

பொதுமக்களின் வசதிக்காகச் சாலையின் இரண்டு பக்கங்களிலும் எஸ்கலேட்டர், 'லிப்ட்' மற்றும் படிகட்டுகள் ஆகிய அனைத்து நவீன வசதிகளும் அமைத்துக் கொடுக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடம் என்பதால், அதனுடன் இணக்கமாக இருக்கும் வகையில் பாரம்பரிய வடிவம் மாறாமல், பல்கலைக்கழக முகப்பு மாடலிலேயே இந்த நடைமேம்பாலம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article