தஞ்சாவூர்: தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கமான அதிமுக அழிந்து போகும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது, அந்த இயக்கத்தின் மீது அவர் கொண்டுள்ள வன்மத்தையே காட்டுகிறது. அதிமுக அழியாது; செங்கோட்டையன் தான் வீழ்ந்து போவார். சினிமாவில் ஹீரோ இருந்த விஜய், அரசியலில் வில்லனாக இருக்கிறார்” என அதிரடியாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டதை வரவேற்கிறேன்

தஞ்சாவூரில் இன்று நிருபர்களை சந்தித்த டிடிவி. தினகரன் கூறியதாவது: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டிருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில், சென்னையின் விமானப் போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, தற்போதுள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான மாற்றுத் திட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். பரந்தூர் பகுதி முன்னேற்றத்திற்கு வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

“அதிமுக அழியாது; செங்கோட்டையன் வீழ்வார்”

தன்னை வளர்த்து ஆளாக்கிய அதிமுக இயக்கத்தை அழிந்து போகும் என செங்கோட்டையன் கூறியிருப்பது வன்மத்துடன் பேசுவதாகும். அதிமுக, அமமுகவில் இருந்தவர்களை அழைத்துச் சென்று தற்போது நடுரோட்டில் நிறுத்தியிருக்கிறார். தவெகவில் செங்கோட்டையனின் நிலை என்ன என்பது எனக்கு தெரியும். அதிமுக ஒருபோதும் அழியாது; செங்கோட்டையன் தான் வீழ்ந்து போவார்.

“சினிமாவில் ஹீரோ... அரசியலில் வில்லன்!”

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசும்போது, “மூன்று பைல்களை நான் ஓபன் செய்ய வேண்டியிருக்கும்” என்று மிரட்டும் தொனியில் பேசியது கண்டிக்கத்தக்கது. யார் தவறு செய்திருந்தாலும் அது தவறுதான். அந்த கோப்புகளை பார்த்து உண்மை இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற மிரட்டல்களுக்கு திராவிடக் கட்சிகள் பயந்து விடாது.

சினிமாவில் விஜய் ஹீரோவாக பார்க்கப்பட்டார். ஆனால் அரசியலில் அவர் வில்லனாக இருக்கிறார். “தூய சக்தி” என்று சினிமா வசனம் பேசி அரசியலுக்கு வந்தவர் விஜய். அவர் என்ன சுதந்திரப் போராட்ட தியாகியா? அவரை சிறந்த அரசியல் வில்லன் நடிகர் எனக் கூறி பாரத ரத்னா விருது கூட கொடுக்கலாம்.

“தவெகவை மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்”

தவெகவுக்கு வாக்களித்த மக்கள் தற்போது உண்மையை உணரத் தொடங்கியுள்ளனர். 6 சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும் என மாற்றியுள்ளனர். அதிலும் வருமான வரம்பு எதற்காக நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தில் ஏராளமான படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கும் நிலையில், நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை நியமிக்க உள்ளனர். தங்க மோதிரம் திட்டத்துக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நகைக்கடைக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. “பெயர் தான் தமிழக வெற்றி கழகம்; செய்வது எல்லாம் வேறு வேலை.

“தமிழகம் பின்னோக்கி செல்லும் நிலை உருவாகுமோ என்ற அச்சம்”

திராவிட ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், தமிழகம் வளர்ந்த மாநிலங்களில் முன்னணியில் இருந்தது. தற்போது அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்னடைவை நோக்கிச் செல்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அரிசி, பருப்பு, ஜீனி போன்றவற்றின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டும் என ஆசைப்படுவது தவறில்லை. ஆனால் அதற்கான நேரம் வர வேண்டும். பிரதமர் மோடி குஜராத்தில் 12 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டதன் பின்னரே பிரதமர் பதவிக்கான வாய்ப்பை பெற்றார். அதுபோன்ற செயல்பாடு முதலில் இருக்க வேண்டும். முதல்வர் விஜய் முதலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

“தவெக தமிழகத்துக்கு பிடித்த கெட்ட காலம்”

தவெக நம்பகத்தன்மையற்ற கட்சியாக மாறிவிட்டது. தமிழகத்துக்கு பிடித்த கெட்ட காலமாக தவெக உள்ளது. தேர்தலுக்கு முன்பு ஆதரவு தெரிவித்த சில கட்சிகள் தற்போது தவெகவுக்கு எதிராக பேசத் தொடங்கியுள்ளன. அவர்களும் உணரும் காலம் வரும். தவெக ஆட்சியில் தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஆட்சி முறை ஹிட்லர் ஆட்சியைப் போன்று சென்று கொண்டிருக்கிறது.

மேலும், தவெக எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே கார்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளை சமாளிக்க முடியாமல் அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையாக இது உள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இணைந்து சந்திப்போம். இவ்வாறு டிடிவி. தினகரன் தெரிவித்தார்.

Source: Read Full Article