மயிலாடுதுறை: "நாம் என்னதான் திட்டங்களைச் செயல்படுத்தி மக்களுக்குக் கொண்டு போய் சேருங்கள் என்று அறிவுறுத்தினாலும், இங்கு இருக்கின்ற சில அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களின் பிடியில் இன்னும் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்களும் அத்தியாவசியப் பொருட்களும் உரிய நேரத்தில் சென்றடைவதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது" என்று மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத் துறை அமைச்சருமான வெங்கடரமணன் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை மாவட்டம், புகழ்பெற்ற மீனவத் தலைமை கிராமமான தரங்கம்பாடியில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் திருக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாள் திருவிழாவான நேற்று, மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக உணவுத் துறை அமைச்சருமான வெங்கடரமணன் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.கோயிலுக்கு வருகை தந்த அமைச்சருக்கு, மீனவக் கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கோயில் உள்ளே சென்ற அமைச்சர், தனது பெயரிலும், தமிழக முதல்வர் பெயரிலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்து வழிபாடுகளை மேற்கொண்டார். வழிபாட்டிற்குப் பின், கோயிலுக்கு வெளியே திரண்டிருந்த பொதுமக்களைச் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கேட்டறிந்தார்.

மீனவப் பஞ்சாயத்தார்களின் முக்கியக் கோரிக்கைகள்

நிகழ்ச்சியின் போது, தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் அமைச்சரிடம் சில முக்கியக் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தனர். அதில்:

1. வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடிப் பகுதியில் அச்சுக்கூடத்தை நிறுவிய சீகன்பால்கிற்குத் தகுந்த மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. உள்ளூர் மக்களின் நிதிச் சேவைகளுக்காகவும் மீனவர்களின் தேவைகளுக்காகவும் தரங்கம்பாடியில் புதிய கூட்டுறவு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும்.

கோரிக்கைகளுக்கு அமைச்சரின் உடனடி உறுதிமொழி

பொதுமக்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு உரையாற்றிய அமைச்சர் வெங்கட்ரமணன், "மீனவர் கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு விரைவாக நிறைவேற்றப்படும்" என உறுதியளித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "இன்று தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு பிரச்சினை உள்ளது என்றால், அதற்கு முக்கியக் காரணம் கடந்த 50, 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த மற்ற கட்சிகள்தான். அவர்கள் ஓட்டுக்காகவும், பதவிக்காகவும், பணத்துக்காகவும், பொருளுக்காகவுமே அமைப்புகளை உருவாக்கினார்கள். அதனால்தான் இவ்வளவு சிக்கல்கள் நிலவுகின்றன. ஆனால், நமது அரசு மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது" என்று குறிப்பிட்டார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதல் & நேரடி ஆய்வுகள்

அமைச்சர் தனது உரையில் முதலமைச்சரின் செயல்பாடுகள் குறித்துப் பேசுகையில், "நான் முதல்வரைச் சந்திக்கும் போதெல்லாம், 'உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மக்களை நேரடியாகச் சென்று சந்தியுங்கள்; அவர்களின் குறைகளைக் கேட்டு அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யுங்கள்' என்றே அறிவுறுத்துவார். அதன்படியே நான் ஒவ்வொரு மாதமும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை தருகிறேன். இங்கு வரும்போதெல்லாம் என்னென்ன கோரிக்கைகள் இருக்கிறது என மக்கள் மூலமாகக் கேட்டு அறிந்து, எவ்வளவுக்கு எவ்வளவு சீர்படுத்த முடியுமோ அதை சரிசெய்வேன்" என்று தெரிவித்தார்.

தரமான ரேஷன் பொருட்கள் விநியோகம் - நேரடி ஆய்வு எச்சரிக்கை

தரங்கம்பாடி பகுதியின் உள்கட்டமைப்பு மற்றும் ரேஷன் விநியோகம் குறித்துப் பேசிய அமைச்சர், "சீகன்பால்குவிற்கு தரங்கம்பாடியிலேயே மணிமண்டபம் அமைக்கத் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். மேலும், கூட்டுறவு வங்கி அமைப்பது குறித்த கோரிக்கை எனக்கு இங்கு வருவதற்கு முன்பே தெரிந்திருந்தால், இன்றே வங்கியின் திறப்பு விழாவோடு வந்திருப்பேன். விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும்" என்றார்.

கடந்த பயணத்தின் போது பொதுமக்கள் எழுப்பிய புகார்களை நினைவுகூர்ந்த அமைச்சர்; "கடந்த முறை நான் இங்கு வந்தபோது, தரங்கம்பாடியில் நல்ல அரிசி வழங்குவதில்லை என்று தாய்மார்களும் பெண்களும் கோரிக்கை வைத்தீர்கள். நாம் தலைமை இடத்திலிருந்து திட்டங்களையும் பொருட்களையும் சரியாகச் செயல்படுத்தி கொண்டு வந்து கொடுங்கள் என்று சொன்னாலும், இங்கு இருக்கிற சில முந்தைய ஆட்சியாளர்களின் பிடியில் இருப்பதால் சில நேரங்களில் திட்டங்களும், நாம் எதிர்பார்க்கிற பொருட்களும் சென்றடைவதில் தாமதம் ஆகிறது. "ஆனால், நிச்சயமாக அடுத்த மாதம் நான் வரும்போது இந்தப் பகுதிக்கு, இந்த தரங்கம்பாடியில் இருக்கிற இந்த ரேஷன் கடைகளிலும் தரமான பொருள் கண்டிப்பாக கிடைக்கும் என்று உத்தரவாதம் தருகிறேன். நானே நேரில் வந்து ஆய்வு செய்து பார்ப்பேன்" என உறுதியளித்தார்.

எதிர்க்கட்சிகளின் போலித்தனமும், அரசின் வெளிப்படைத் தன்மையும்

சட்டமன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி அமைச்சர் பேசுகையில்; "சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட, 'எங்கள் தொகுதியில் 50 ஆண்டுகளாக இந்தச் சிக்கல் உள்ளது, அதைச் சரிசெய்து கொடுங்கள்' என்று நம்மிடம் தான் கோரிக்கை வைக்கிறார்கள். ஏனெனில், அவர்களது கட்சி ஆட்சியில் இருந்தபோது இதையெல்லாம் சரிசெய்ய மாட்டார்கள் என்பது அவளுக்கே தெரியும். முந்தைய ஆட்சியில் 'கட்டிங், கமிஷன், கரப்ஷன்' மட்டுமே இருந்தது. வெறும் வாயில் வடை சுடுவார்களே தவிர, வேலையில் காட்ட மாட்டார்கள் என்பதை எதிர்க்கட்சியினரே தங்களின் கோரிக்கைகள் மூலம் மன்றத்தில் பதிவு செய்கிறார்கள்."

"நேற்று முன்தினம் கூட இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், 'நீங்கள்தான் எங்கள் மாவட்ட பொறுப்பு அமைச்சர், அதைச் செய்து கொடுங்கள்' எனக் கேட்டார். முந்தைய ஆட்சிக்காலத்தில் பொறுப்பு அமைச்சர்களாக இருந்தவர்களிடம் இப்படி எதிர்க்கட்சியினர் தைரியமாகக் கேட்டது உண்டா? ஆனால் நமது ஆட்சியில், எந்தச் சட்டமன்ற உறுப்பினர் எந்தக் கோரிக்கை வைத்தாலும் அது ஆய்வு செய்யப்பட்டுத் துரிதமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது" என்று பெருமிதத்துடன் கூறினார்.

Source: Read Full Article