சட்டமன்றத்தில் கூட்டுறவுத் துறை தொடர்பாக அமைச்சர் காந்திராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சட்டமன்றத்தில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் கூட்டுறவுத் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் காந்திராஜ் 39 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

1. மகளிருக்கு சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்து, ஊரக வறுமையைக் குறைக்கவும், நிதிச் சுதந்திரத்துடன் சுயசார்பு அடையச் செய்யவும், மகளிர் தொழில் முனைவோருக்கு "சிங்கப்பெண்கள் கடன் திட்டம்" ரூபாய் 7,015 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

2. ஊரக பகுதிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு ரூபாய் 5000 கோடி கடனுதவி 9 சதவிகித வட்டி விகிதத்தில் முன்னுரிமை அளித்து வழங்கப்படும்.

3. தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு தற்போது வெவ்வேறு விதமான வணிகப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் இப்பொருட்களின் சந்தைப் பங்கு மற்றும் நுகர்வோரிடையே வரவேற்பு போதுமானதாக இல்லை. ஆகையால், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் உற்பத்தி செய்யும் பொருட்களின் தரத்தை மேம்படுத்தி, சந்தைப் பங்கை அதிகரித்து, இலாபத்தை உயர்த்த "வெற்றி" என்ற பொதுவான வணிகச் சின்னம் (Logo) அறிமுகப்படுத்தப்படும்.
இதன்மூலம், கூட்டுறவுப் பொருட்களின் சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டு, நிறுவனங்களின் கூட்டுறவு நிலையான வளர்ச்சி உறுதிசெய்யப்பட்டு விவசாயிகளின் வருவாய் உயர்த்தப்படும்.

4. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் நீடித்த வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் சந்தைப் போட்டித் திறனை மேம்படுத்தவும், வலுவான நிர்வாகம், உறுப்பினர் நலன் மற்றும் தொழில்முறை மேலாண்மை போன்ற முக்கியக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, மக்களை மையப்படுத்திய, தன்னிறைவு பெற்ற பொருளாதார நிறுவனங்களாக கூட்டுறவு அமைப்புகளை மாற்றுவதற்கு முதன்முறையாக மாநில கூட்டுறவுக் கொள்கை உருவாக்கப்படும்.

5. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகின்ற சேவைகளை அதிகரித்திட, குறைந்தபட்சம் ஒவ்வொரு சங்கமும் உரம், விதை விற்பனை, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை நடத்துதல், இ-சேவை மையம் நடத்துதல் மற்றும் கிடங்குகளை வாடகைக்கு விடுதல் போன்ற ஐந்து சேவைகளை வழங்கிடும் வகையில் தரம் உயர்த்தப்படும்.

6. சேமிப்புக் கணக்கு துவக்குதல், அடிப்படை வங்கி மற்றும் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குதல், வைப்புகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க, வங்கி வசதிகள் குறைவாக உள்ள 3,452 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கப் பகுதிகளில், ரூபாய் 6.90 கோடி மதிப்பீட்டில் நுண் தானியங்கி சாதனங்கள் (Micro ATM) நிறுவப்படும்.

7. கூட்டுறவுச் சங்கங்களின், செயல் எல்லையில் உள்ள அனைவரும் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினராகி சங்கத்தின் சேவைகளை பெறும் வகையில், பெருமளவிலான உறுப்பினர்களை (Mass Membership Drive) இணைய உறுப்பினர் சேர்க்கை வலைத்தளம் (Online Membership Portal) ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

8. விவசாயிகளின் போக்குவரத்து செலவு, அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்கவும் மற்றும் இலாபகரமான விலை கிடைக்கவும், விவசாயிகளின் விளை நிலங்களின் அருகிலேயே நெல், மஞ்சள், மக்காச்சோளம் மற்றும் தேங்காய் போன்ற தரமான விளைபொருட்கள் இடைத்தரகர்கள் இன்றி சந்தைப்படுத்திட 50 கூட்டுறவு விற்பனை சங்கங்களின் மூலம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் பண்ணைக் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்படும்.

9. கூட்டுறவு விற்பனை சங்கங்களால் கொள்முதல் செய்யப்படும் மஞ்சள், முருங்கை, மிளகு போன்ற விளைபொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (NCEL) போன்ற நிறுவனங்களின் உதவியுடன் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் ஏற்றுமதி செய்யப்படும்.

10. தற்போது நடைமுறையில் உள்ள கூட்டுக் கொள்முதல் குழு (JPC) கலைக்கப்பட்டு, கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் (CMS), பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் (LAMPS), சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) உள்ளிட்ட கூட்டுறவு அமைப்புகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் (TNCCF) மூலம் புதிய இணையவழி கொள்முதல் நடைமுறை உருவாக்கப்படும். இதனால் கூட்டுறவு நிறுவனங்களின் பொருட்களுக்கு விரிவான சந்தை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு, மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த மற்றும் வெளிப்படையான கூட்டுறவு விநியோகச் சங்கிலி உருவாக்கப்படும்.

11. எளிதாக பொருட்களை வாங்குவதற்கும், சரக்குப் பட்டியலை நிர்வகிக்கவும் பணம் செலுத்த உதவும் இயந்திரங்கள் மூலம், தற்போது 10,803 நியாயவிலைக் கடைகளில் UPI பணப் பரிவர்த்தனை முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நடைமுறை, மேலும் 10,000 நியாயவிலைக் கடைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.

12. கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளவும், 25 க்கும் மேற்பட்ட கடன் சேவைகளையும், இதர வணிக மற்றும் குறை தீர்வு சேவைகளையும், பொதுமக்கள் எளிதாகவும் விரைவாகவும் பெற ஏதுவாக வலைத்தளம் (Portal) மற்றும் கூட்டுறவு செயலி (Mobile app) உருவாக்கப்படும்.

13. தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியிலிருந்து மறுநிதி பெற்று, தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், விவசாயிகளுக்கு நீண்டகால கடன்களை 2004-ம் ஆண்டு வரை வழங்கி வந்தது. விவசாயத் தேவை மற்றும் விவசாயிகளின் கோரிக்கை அடிப்படையில் வேளாண் இயந்திரமயமாக்கல், குளிர்பதன கிடங்குகள், கால்நடை வளர்ப்பு, கோழிப் பண்ணை, அறுவடைக்குப் பிந்தைய உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகளுக்கு மீண்டும் நீண்டகால கடன்கள் ரூபாய் 50 கோடி வழங்கப்படும்.

14. விவசாயிகளுக்கு இடுபொருட்கள் விலை குறைவாகவும், தரமாகவும் கிடைக்கச் செய்து விளைச்சலை அதிகரித்திட, மத்திய அரசின் பங்களிப்புடன், மாநில வேளாண் துறையுடன் இணைந்து உரம் மற்றும் விதைகளை TANFED கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்கி வருகின்றது. தற்போது ரூபாய் 8 9 8 கோடி அளவில் உள்ள விற்பனை, ரூபாய் 2500 கோடி வரை அதிகரிக்கப்படும்.

15. புதிதாக ஏற்படுத்தப்படும் 150 நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

16. தற்போது 1864 கூட்டுறவு நிறுவனங்களில் நகைகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை, திருட்டு மற்றும் தீ விபத்து போன்ற எதிர்பாராத ஆபத்துகளிலிருந்து பாதுகாப்பாக வைத்திட பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளன. மேலும், ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் புதிதாக 82 கூட்டுறவு நிறுவனங்களில், பாதுகாப்புப் பெட்டகங்கள் நிறுவப்படும். (Safety Lockers)

17. கூட்டுறவு நிறுவனங்கள் நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி, மேம்படுத்தப்பட்ட தரமான சேவைகளை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கிட, விரிவான ஆய்வறிக்கை சுமார் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் தயார் செய்யப்படும்.

18. வேளாண் விளைபொருட்களை நட்ட விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்கும் நோக்கில், விவசாயிகள் விளைபொருட்களைக் கூட்டுறவுச் சங்கக் கிடங்குகளில் பாதுகாப்பாக சேமித்து வைத்து, உரிய நேரத்தில் சந்தையில் இலாபகரமான விலைக்கு விற்பனை செய்யும் வகையில் ரூபாய் 300 கோடிக்கு விளைபொருள் ஈட்டுக் கடன் வழங்கப்படும்.

19. வேளாண் விளைபொருட்களான தேங்காய் மற்றும் பருத்தி போன்றவற்றை அப்பகுதியிலேயே எளிதாக சந்தைப்படுத்தும் வகையில் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் ஆய்க்குடி கிராமத்தில், 5084 சதுர அடி இடத்தில் புதிய ஏலக்கூடம் ரூபாய் 53 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

20. தற்போது 7 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் மின்னணு ஏலமுறையில், கொப்பரை மற்றும் மஞ்சள் ஆகிய விளை பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேலும் 50 கூட்டுறவு விற்பனைச் சங்கங்களுக்கு ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்படும்.

21. இயற்கை வேளாண் விளைபொருட்களான பாரம்பரிய நெல், சிறுதானியங்கள், மஞ்சள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான நாட்டுச் சர்க்கரை, பருப்பு வகைகள் போன்றவற்றை முதற்கட்டமாக இரண்டு மாவட்டங்களில் கூட்டுறவு விற்பனை சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் மாநிலம் முழுவதும் விற்பனை செய்யப்படும்.

22. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் உற்பத்தி செய்யும் வேளாண் உர பொருட்களான மண்புழு உரம், பஞ்சகாவ்யா போன்ற இயற்கை உரங்கள், டான்பெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து கூட்டுறவு நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படும்.

23. அனுமதிக்கப்பட்ட ஈரப்பத தேவையின்படி விவசாயிகள் தங்களது நெல்லை கட்டண முறையில் உலர்த்துவதற்கும், சேமித்து வைப்பதற்கும் ஏதுவாக, முதற்கட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தும் கருவியுடன் கூடிய வசதி மையங்கள் (Facilitation centres) நடத்திட கூட்டுறவுத்துறை மூலம் கடன் வழங்கப்படும்.

24. நெல்லை கொள்முதல் செய்து எடையிட்டு, சிப்பமிட்டு ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கி நியாய விலைக் கடைகளுக்கு வழங்குவது வரையிலான நடவடிக்கைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ஏதேனும் ஒரு டெல்டா மாவட்டத்தில் பரீட்சார்த்த முறையில் ஒரு மையத்தில் ஏற்று நடத்துவதற்கான வணிக சாத்தியக்கூறுகள் குறித்து திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

25. விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை கொள்முதல் செய்வது முதல், பொதுமக்களுக்கு விற்பனை செய்வது வரையிலான அனைத்து நிலைகளிலும் சேவைகளை மேம்படுத்திட ஒருங்கிணைந்த வழங்கல் தொடர் மேலாண்மை திட்டத்திற்கான ஆய்வறிக்கை ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

26. கூட்டுறவு மற்றும் பிற துறையினரின் சேமிப்பு கிடங்குகளை கண்டறிந்து புதுப்பிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், கிடங்குகள் இல்லாத இடங்களில் தேவையினை கண்டறிந்து புதிய சேமிப்புக் கிடங்குகளை கட்டுவதற்கும் விரிவான திட்ட அறிக்கை ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

27. கூட்டுறவுத்துறையின் மூலம் வழங்கப்படும் சேவைகளான வங்கியியல், சந்தைப்படுத்துதல், நுகர்வோர் வணிகம் போன்ற செம்மைப்படுத்திடவும், வாய்ப்புகளைக் புதிய பணிகளை சந்தை கண்டறியவும், நுகர்வோர் வணிகத்தை மேம்படுத்தவும் மாநில அளவில் வணிக திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு அலகு (Business Development and Monitoring Unit -BDMU) ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

28. நியாயவிலைக்கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை கண்காணித்திட நிகழ்நேர இருப்பிடத்தைக் கண்காணிக்கும் (Real Time Vehicle Tracking) ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். இந்நடைமுறையின் மூலம் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோக சங்கிலித் தொடர் முழுமையடையும்.

29. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 நியாயவிலைக் கடைகள் பல்நோக்கு சில்லறை விற்பனை நிலையங்களாக மாற்றப்பட்டு, மருந்தகம், ஆவின், இ-சேவை மையம் (CSC), பண்ணைப் பசுமை நுகர்வோர் கடை (FFCO) 2 ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்படும். இதன் மூலம் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (FPOs) ஆகியவற்றின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் உருவாகி, விற்பனை அதிகரிப்பதுடன் பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.

30. கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் பண்டக சாலைகள் மற்றும் நியாயவிலை கடைகள் மூலம் விற்கப்படும் பொருட்களின் தரம் மற்றும் சேவை குறித்து கருத்துக்களை பொது மக்கள் எளிதான முறையில் தெரிவிக்க QR Code மூலம் கருத்து கேட்கும் (Feedback) நடைமுறை ரூபாய் 12 இலட்சம் மதிப்பீட்டில் நடைமுறைப் படுத்தப்படும். இதன் மூலம் சேவை தரத்தினை மேம்படுத்திடவும் வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் வழிவகை செய்யப்படும்.

31. 100 நியாயவிலைக் கடைகளில் தற்போதுள்ள கையால் எழுதப்படும் தகவல் பலகைகளுக்குப் பதிலாக, விற்பனை முனைய இயந்திரங்களுடன் (PoS) நேரடியாக இணைக்கப்பட்ட தானியங்கி LED தகவல் பலகைகள் பொருத்தப்படும். இதன் மூலம் இருப்பு மற்றும் விலை விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.

32. நியாய விலைக் கடை பணியாளர்கள் பொது மக்களுடன் பழகும் முறையினை சீர்படுத்தவும், சேவையை மேம்படுத்தவும் மற்றும் அவர்தம் மன அழுத்தத்தை கையாளவும் இந்தாண்டு 5000 பணியாளர்களுக்கு முதற்கட்டமாக புத்தாக்கப் பயிற்சி வழங்கப்படும்.

33. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பாதுகாப்பு (Cyber Security), (Financial Management), மன அழுத்த மேலாண்மை (Stress Management) போன்ற பாடங்களில் குறுகிய கால படிப்புகளும் இணையவழிச் சான்றிதழ் படிப்புகளும் 10,000 பணியாளர்களுக்கு "திறன்" இணையதளம் மூலம் வழங்கப்படும். இதற்கான பயிற்சி பாடத்திட்டம் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.

34. கூட்டுறவு சங்கங்கள் தற்போது 61 வாகன எரிபொருள் நிரப்பும் மையங்களை நடத்தி வருகின்றன. புதிதாக மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் திண்டுக்கல் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களுக்கு சொந்தமான இடங்களில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன், வருமான பகிர்வு அடிப்படையில் வாகனங்களுக்குத் தேவையான இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் நிரப்பும் மையங்கள் ரூபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

35. கூட்டுறவு நிறுவனங்களின் வருவாயை பெருக்கவும் பொதுமக்கள் பயணத்தின்போது தங்களது வாகனங்களை எளிதாக சார்ஜ் செய்ய ஏதுவாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மூன்று மின்வாகன மின்னேற்ற நிலையங்கள் கரூர், திண்டுக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ரூபாய் 1.05 கோடி செலவில் நிறுவப்படும்.

36. பயிர் அறுவடைக்குப் பிந்தைய பொருட்களான வைக்கோல், பயிர் கட்டைகள், உமி, தவிடு, ஓடுகள் போன்றவற்றினை, மண்புழு உரம் போன்ற மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 10 கோடி கடன்கள் வழங்கப்படும்.

37. கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர்களின் விவரங்கள் மற்றும் தரவுகள் தற்போது நிறுவன அளவில் தனித்தனியாக பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மனிதவளத்தை திறம்பட பயன்படுத்தவும், செயல்திறனை மேம்படுத்தவும், வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும், ஒருங்கிணைந்த மனித வள மேலாண்மையை மேற்கொள்ளவும், பணியாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தரவுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும். இதற்காக சுமார் ரூபாய் 1.5 கோடி செலவில் மென்பொருள் உருவாக்கப்படும்.

38. தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு சொந்தமான 4.5 ஏக்கர் இடத்தில், உயர் சிறப்பங்காடி (Hyper Mart), வணிக வளாகங்கள் ஆகியவற்றுடன் கூடிய பதிவாளர் அலுவலக கட்டடம் கட்டுவதற்கு கூட்டுறவு நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக (Joint Venture) அறிக்கை ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

39. கூட்டுறவுத்துறையால் வாடகை கட்டடங்களில் நடத்தப்பட்டு வரும் 5,716 நியாயவிலைக் கடைகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட படிப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டு 150 நியாயவிலைக் கடைகளுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலமாக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, நியாயவிலைக் கடை ஒன்றுக்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் மொத்தம் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

Source: Read Full Article