தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்கு செல்கிறீர்களா? இனி செல்போனை கோயிலுக்குள் கொண்டு செல்ல முடியாது! கோயிலின் புனிதத் தன்மை, அமைதி மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில், நாளை (செப்.1) முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயில் நுழைவுவாயில்களில் பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்துள்ள பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. சக்தி தலங்களில் ஒன்றாகவும், பக்தர்களின் காவல் தெய்வமாகவும் போற்றப்படும் இக்கோயிலுக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர்.

குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். இதனால் கோயில் வளாகத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல், தரிசன முறையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் கோயிலின் ஆன்மிகச் சூழலை பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறுகின்றன. ஆடி மாதத்தில் முத்துப்பல்லக்கு, ஆவணி மாதத்தில் தேர் திருவிழா, புரட்டாசியில் தெப்பத்திருவிழா, மார்கழியில் லட்சதீபம் மற்றும் நவராத்திரி விழா என ஆண்டு முழுவதும் பக்தர்கள் திரளும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின்படி, கோயிலின் புனிதத் தன்மை, ஒழுங்கு மற்றும் அமைதியான சூழலைப் பேணும் நோக்கில் செப்.1 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கோயிலின் கிழக்கு மற்றும் வடக்கு வாயில் அருகே செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது செல்போன்களை இந்த மையங்களில் ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து, அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தரிசனம் முடிந்து வெளியே வந்ததும், பாதுகாப்பு மையத்தில் ரசீதைக் காண்பித்து தங்களது செல்போனை பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் பக்தர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் செல்போனை பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்ய முடியும்.

மேலும், இந்த உத்தரவை மீறி மறைமுகமாக செல்போனை கோயிலுக்குள் எடுத்துச் செல்லும் பக்தர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

எனவே, புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள், புதிய நடைமுறையை அறிந்து கொண்டு, செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து கோயில் நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளி மாவட்டம், மாநிலத்தில் இருந்தும் வரும் பக்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் புகைப்படம் எடுக்க கூடாது என்ற அறிவிப்பு இருந்தும் அதை மீறி செயல்பட்டு வந்ததால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இந்த செல்போன் தடை என்பது இனி முழுவதும் அம்மன் தரிசனத்தில்தான் இருக்கும். செல்போனில் இருக்காது என்பதும் மட்டும் மறுக்க முடியாத உண்மை.

Source: Read Full Article