" கத்தியில் ரத்தக் கரையுடன் சுத்திய நபர் "

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கைதக்குழி நாரகம்விளை பகுதியைச் சேர்ந்தவர் சிஜி ( வயது 24 ). இவர் கடந்த 2021 - ம் ஆண்டு தனது தாயை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சிஜி , தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். மேலும் , சிஜி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிஜி ரத்தக் கறையுடன் கையில் கத்தியை வைத்துக் கொண்டு தெருவில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து , உடனடியாக களியக் காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

"ரத்த வெள்ளத்தில் பெண் சடலம்"

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் , சிஜிவை மடக்கிப் பிடித்து அவரிடம் இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி , என்ன நடந்தது என போலீசார் விசாரித்துள்ளனர். ஆனால், சிஜி எந்த பதிலும் அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

அவரது மனநிலையை கருத்தில் கொண்ட போலீசார் , பக்குவமாக சிஜிவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அருகில் உள்ள வீட்டை போலீசார் பார்வையிட்ட போது , அங்கு பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் கத்திக் குத்து காயங்களும் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் , அருகே பெரிய கல் ஒன்றும் கிடந்துள்ளது.

"கத்தியால் குத்தியும் , கல்லால் அடித்து கொலை"

இதையடுத்து போலீசார் சிஜி மற்றும் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் , கொலை செய்யப்பட்ட பெண் அதே பகுதியைச் சேர்ந்த அசோக்குமாரின் மனைவி லீலா ( வயது 56 ) என்பதும் , அவர் சிஜிவின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.

சிஜிவுன் தாய் இறந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கருதி லீலா , அவர் மீது அக்கறையுடன் பழகி வந்திருக்கிறார். எனவே சிஜி அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் , லீலாவின் வீட்டிற்கு சென்ற சிஜி , அவரை கத்தியால் குத்தியதுடன், கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து லீலாவின் உடலை கைப்பற்றிய போலீசார் , பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக சிஜிவை பிடித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கெனவே தாயை கொலை செய்த வழக்கில் சிக்கிய இளைஞர் , தற்போது உறவினரான 56 வயது பெண்ணை கத்தியால் குத்தியும் கல்லால் தாக்கியும் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் களியக்காவிளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article