" சிசிடிவியில் சிக்கிய காட்சிகள் "

கோவை கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்றாம்பாளையம் பிரிவு அருகே தனியார் நிறுவனத்தை ஒட்டியுள்ள காலி இடத்தில் கடந்த (ஜூலை 31_ ஆம் தேதி பெண் ஒருவர் உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை தொடங்கினர்.

இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்த கோவை மாவட்ட காவல் துறை சார்பில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் சம்பவ இடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 120-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.

மேலும் , பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை மேற்கொண்டனர்.இதில், கடந்த ( ஜூலை 27 ) ஆம் தேதி சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் ஒருவர் வந்து சென்றது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன.

அந்த இருசக்கர வாகனத்தில் சென்ற நபரின் செயல்பாடுகளை பல்வேறு பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வாகனம் பொள்ளாச்சி பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது. சிசிடிவி காட்சிகளில் பதிவான நபரின் புகைப்படத்தை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் , அவர் அருகிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவது தெரிய வந்தது.

தனிமையில் இருந்த போது ஏற்பட்ட சண்டை

சி.சி.டி.வி.யில் உள்ள பொள்ளாச்சியைச் சேர்ந்த 35 வயதுடைய பழனிமுத்து என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் ஜமீன் கோட்டாம்பட்டியைச் சேர்ந்த 30 வயதுடைய சங்கீதா என்பது தெரிய வந்தது. மேலும், பழனிமுத்துவுக்கும் சங்கீதாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதங்களாக சங்கீதா மற்றொரு நபருடன் தொடர்பில் இருப்பதாக பழனி முத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டு , இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இந்த நிலையில் , கடந்த (ஜூலை 27) ஆம் தேதி இரவு கிணத்துக் கடவில் உள்ள பழனிமுத்துவின் வாடகை வீட்டில் இருவரும் தனிமையில் இருந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பழனிமுத்து, கத்தியால் சங்கீதாவை குத்திக் கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலைக்குப் பிறகு , கொலையை மறைத்து தடயங்களை அழிக்கும் நோக்கில் தனது தந்தை குருநாதன் ( வயது 60 ) என்பவரை பழனி உதவிக்கு அழைத்திருக்கிறார். பின்னர் இருவரும் சேர்ந்து சங்கீதாவின் உடலை போர்வையில் சுற்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர். சென்றாம்பாளையம் பிரிவு அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு உடலை கொண்டு சென்ற அவர்கள், பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி, சம்பவம் தொடர்பாக பழனிமுத்து மற்றும் அவரது தந்தை குருநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Source: Read Full Article