கேரள மாநிலம் தொன்மையான மற்றும் பிரபலமான கோவில்களுக்கு பெயர் பெற்றது சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், பத்மநாப சுவாமி கோவில் உள்ளிட்ட பல புகழ்பெற்ற கோவில்கள் கேரளாவில் அமைந்துள்ளன. எனினும் கேரளாவில் உள்ள சில குறிப்பிட்ட கோவில்களில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சில வழிபாட்டு நிகழ்வுகளின்போது ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகளில் போது பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. அதேபோல் வழக்கமான நாட்களில் ஆண்கள் இந்த கோவில்களில் நுழையவோ, வழிபாடு செய்யவோ எந்தவித தடையும் இல்லை. அப்படி ஆண்கள் நுழைய முடியாத கோவில்களை பற்றியும், எந்த சமயங்களில் ஆண்கள் கோவிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில்:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஆற்றுக்கால் பகவதி கோவில் (Attukal Bhagavathy Temple) உலகப் புகழ்பெற்றது. இக்கோவிலின் மூலவர் சிலப்பதிகார நாயகி கண்ணகியாக வணங்கப்படுகிறார். சிலப்பதிகார நாயகி கண்ணகியின் அவதாரமாகப் போற்றப்படும் இக்கோவில் "பெண்களின் சபரிமலை" என்று அழைக்கப்படுகிறது. மதுரையை எரித்த பின் கொடுங்கல்லூர் செல்லும் வழியில் கண்ணகி இங்குத் தங்கியதாக ஐதீகம். இந்தக் கோவிலில் பெண்கள் மட்டுமே வழிபடச் செல்கின்றனர், ஆண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை. வழக்கமான நாட்களில் ஆண்கள் இக்கோவிலுக்குச் சென்று வழிபட அனுமதி உண்டு. ஆனால், ஆண்டு தோறும் நடைபெறும் புகழ்பெற்ற 'ஆற்றுக்கால் பொங்கலை' திருவிழாவின்போது கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்கள் நுழைய அனுமதி இல்லை.

சக்களத்துகாவு பகவதி கோவில்

கேரள மாநிலம் ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் பம்பை மற்றும் மணிமலை ஆறுகளுக்கு நடுவே அமைந்துள்ள சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் (Chakkulathukavu Sree Bhagavathi Temple), சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானது. சபரிமலை ஐயப்பன் கோவிலைப் போலவே இங்கேயும் பெண்கள் இருமுடி கட்டி, கடுமையான விரதம் இருந்து அம்மனை வழிபடுகிறார்கள்.

கேரளாவில் உள்ள சக்குளத்துக்காவு ஸ்ரீ பகவதி கோவிலில் ஆண்டுதோறும் 'நாரி பூஜை' (Naari Puja) என்ற முக்கியமான சிறப்புச் சடங்கு நடைபெறுகிறது. வழக்கமாக டிசம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையன்று வரும் இந்தச் சடங்கு நாளில், பெண்களைச் சக்தியின் வடிவமாகப் போற்றும் வகையில், பெண் பக்தர்கள் சிறப்பு இருக்கைகளில் அமர்ந்திருக்க, ஆண் அர்ச்சகர்களால் அவர்களின் பாதங்கள் கழுவி, அவர்களைத் தெய்வமாகக் கருதிப் போற்றி வழிபாடு செய்வார். இக்கோவிலில் நடக்கும் 'நாரி பூஜை' நேரத்தில், ஆண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது. அதாவது, பெண்களின் சக்தியையும் கவுரவத்தையும் முன்னிறுத்தும் இந்த ஒரு நாள் விழாவில், தூய்மையையும் தனித்துவமான வழிமுறைகளையும் பேண ஆண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

கொட்டங்குளங்கரை தேவி கோவில்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சாவரா (Chavara) பகுதியில் அமைந்துள்ள கொட்டங்குளங்கரை தேவி கோயில் (Kottankulangara Devi Temple) அங்குள்ள பகவதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற வழிட்டுத் தலமாகும்.

இக்கோவிலின் மூலவர் தேவி சிலை மனிதர்களால் உருவாக்கப்படவில்லை; சுயம்புவாக (தானாகத் தோன்றியதாக) உருவானது என்ற ஐதீகம் நிலவுகிறது. இக்கோவிலின் கருவறைக்கு மேல் கூரை அல்லது விமானம் எதுவும் கிடையாது. வானம் திறந்தே காணப்படும் இந்த அமைப்பு வேறு எங்கும் காண முடியாத சிறப்பம்சமாகும். இக்கோவிலில் நடைபெறும் சில சிறப்பு யோக/தந்திர சடங்குகளின்போது பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி உண்டு. குறிப்பிட்ட வழிபாட்டு நேரங்களின் போது ஆண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பெண்கள் மட்டுமே வழிபாடுகளை நடத்துவர். ஆண்கள் தங்களின் அகந்தையை நீக்கி, முழுமையான பக்தியுடன் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து தேவியை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.

Source: Read Full Article