அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளராக பதவி வகிந்து வந்த திருநங்கை அப்சரா ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதிமுகவை விட்டு வெளியேறும் நிர்வாகிகள்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் நடைபெற்ற 2021, 2026 சட்டமன்ற தேர்தல்கள், 2019 மற்றும் 2024ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 2022ம் ஆண்டு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றப் பின் அக்கட்சி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு நாளும் அடிமேல் அடி விழுந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

தவெக பெரும்பான்மை இல்லாமல் தவித்த நிலையில், மற்றொருபுறம் திமுக ஆதரவோடு அதிமுக ஆட்சியமைக்கப் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனை அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு தரப்பு உறுதிப்படுத்தியது. திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளும் இதனை ஒப்புக்கொண்டது. சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர் தவெக அரசுக்கு வாக்களித்தனர்.

அதோடு மட்டுமல்லாமல் தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் ஆகிய தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் ஐக்கியமாயினர். அதுமட்டுமல்லாமல் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் தவெகவுக்கு தாவி வருகின்றனர். சமீபத்தில் அதிமுக மாணவரணி செயலாளராக பதவி வகித்த சிங்கை ராமச்சந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்.

அப்சரா ரெட்டி விலகல்

இந்த நிலையில் அதிமுவில் இருந்து விலகுவதாக மாநில துணை கொள்கைப் பரப்புச் செயலாளர் அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகுந்த வருத்தத்துடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன். அதிமுகவுடனான எனது தொடர்பு ஒருபோதும் வெறும் அரசியல் சார்ந்ததாக இருந்ததில்லை. அது, புரட்சித் தலைவி அம்மா மீது நான் கொண்டிருந்த ஆழ்ந்த போற்றுதல், அன்பு மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையில் வேரூன்றியதாகும். அவரை நான் எப்போதுமே எனது அரசியல் உத்வேகமாகவும் தலைவராகவும் கருதி வந்துள்ளேன்.

மக்கள், கண்ணியம், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சேவை ஆகியவற்றில் வேரூன்றிய அரசியல் குறித்த அம்மாவின் தொலைநோக்குப் பார்வையை நான் எப்போதுமே நம்பி வந்துள்ளேன். என்னைப் பொறுத்தவரை, அரசியல் என்பது உடைப்பதாக அல்ல, உருவாக்குவதாக இருக்க வேண்டும்; விலக்குவதாக அல்ல, உள்ளடக்குவதாக இருக்க வேண்டும்; மேலும், பிளவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும்.

மேலும், கட்சியுடனான எனது தொடர்பு முழுவதும் நீங்கள் எனக்கு அளித்த கண்ணியம், அரவணைப்பு, நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக எனது மனமார்ந்த நன்றியைப் பதிவு செய்கிறேன். உங்கள் மீதான எனது தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் அசைக்க முடியாததாகவே உள்ளது.

இந்த முடிவு கசப்புணர்ச்சியாலோ அல்லது அவமரியாதையாலோ எடுக்கப்பட்டதல்ல. எனது நம்பிக்கைகளுக்கும், எனது பொது வாழ்க்கைக்கு வழிகாட்டிய கொள்கைகளுக்கும் உண்மையாக இருப்பதற்காக, உணர்வுப்பூர்வமாகவும் ஆழ்ந்தும் எடுக்கப்பட்ட ஒரு முடிவாகும். என் வாழ்வின் ஒரு முக்கிய அத்தியாயத்தை வடிவமைத்த வாய்ப்புகள், பொறுப்புகள், நட்புகள் மற்றும் அனுபவங்களுக்கு நன்றியுடன் கட்சியை விட்டு விடைபெறுகிறேன். அதிமுகவுடனான என் தொடர்பையும், என்னுடன் இணைந்து பணியாற்றும் பாக்கியம் பெற்ற மக்களையும் நான் என்றும் போற்றுவேன்.

என் அரசியல் பயணம் இப்போது வேறு திசையில் செல்லக்கூடும், ஆனால் மக்களுக்குச் சேவை செய்வதற்கான என் அர்ப்பணிப்பு மாறாமல் உள்ளது. மக்களுடன் துணை நிற்பதற்கும், கேட்கப்பட வேண்டிய குரல்களை உரக்க ஒலிப்பதற்கும், பாலங்களைக் கட்டுவதற்கும், துணிவு, கருணை மற்றும் கண்ணியத்துடன் சேவை செய்வதற்கும் அம்மாவின் அடிச்சுவடுகளை நான் தொடர்ந்து பின்பற்றுவேன்.இந்த அரசியல் முடிவுக்குப் பிறகும் நமக்கிடையேயான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் நீடிக்கும் என்று நான் மனதார நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். விரைவில் அப்சரா ரெட்டி தவெகவில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Source: Read Full Article