செயற்கை நுண்ணறிவு துறை உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதில் திறமையான ஆராய்ச்சியாளர்களுக்கான மதிப்பும் வருமான வாய்ப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, AI துறையில் தனது தொழில் பயணத்தை தொடங்கி சில ஆண்டுகளிலேயே உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய டோனி யுஹுவாய் வு என்ற இளம் ஆராய்ச்சியாளர், தற்போது ரூ.670 கோடி மதிப்பிலான சொகுசு மாளிகையை வாங்கியதாக வெளியாகியுள்ள தகவல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவில் பிரம்மாண்ட சொத்து

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சிலிக்கான் வேலி அருகே உள்ள ஹில்ஸ்பரோ பகுதியில் இந்த மாளிகை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ‘Villa de Verano’ என அழைக்கப்படும் இந்த சொத்து சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 70 மில்லியன் அமெரிக்க டாலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.670 கோடியாகும்.

இந்த சொத்து ஒரு சாதாரண ஆடம்பர இல்லம் என்ற அளவில் இல்லாமல், பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆறு படுக்கையறைகள் கொண்ட இந்த மாளிகையில், தனியார் கோல்ஃப் மைதானம், பெரிய அளவிலான வெளிப்புற அரங்கம் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

வீட்டுக்குள் மட்டுமல்ல… தனியார் கோல்ஃப் மைதானம்

இந்த மாளிகையின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் ஒன்பது துளைகள் கொண்ட தனியார் கோல்ஃப் மைதானம். மேலும், சுமார் 150 பேர் அமரக்கூடிய வெளிப்புற அரங்கமும் இங்கு அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 2,100 கேலன் கொள்ளளவு கொண்ட உப்பு நீர் மீன் தொட்டியும் இந்த சொத்தில் இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற வசதிகள் காரணமாக, இந்த மாளிகை ஒரு ஆடம்பர வீட்டை விட தனிப்பட்ட ரிசார்ட் போன்ற தோற்றத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. டோனி யுஹுவாய் வுவின் கல்விப் பின்னணியும் குறிப்பிடத்தக்கது. முதலில் கணிதத்தில் உயர்கல்வி பெற்ற அவர், பின்னர் Machine Learning மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் கவனம் செலுத்தினார்.

கனடாவில் உள்ள University of New Brunswick-ல் கணிதப் பட்டப்படிப்பை முடித்த அவர், அதன்பிறகு University of Toronto-வில் மிஷின் லேர்னிங் தொடர்பான முனைவர் பட்டப்படிப்பை மேற்கொண்டார். 2021ஆம் ஆண்டு தனது PhD படிப்பை நிறைவு செய்தார். கல்வி நிலையிலேயே AI மற்றும் Machine Learning தொடர்பான ஆராய்ச்சியில் கவனம் செலுத்திய அவர், பின்னர் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கவனத்தை ஈர்த்தார்.

OpenAI, Google DeepMind… பின்னர் xAI

டோனி வு தனது ஆரம்பகால தொழில் பயணத்தில் OpenAI மற்றும் Google DeepMind போன்ற முன்னணி AI நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். பின்னர் Google நிறுவனத்தில் Research Scientist ஆகவும் பணியாற்றினார். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் சர்வதேச அளவில் தனது திறமையை நிலைநிறுத்திய அவர், 2023ஆம் ஆண்டு Elon Musk தொடங்கிய xAI நிறுவனத்தின் ஆரம்பகட்ட குழுவிலும் இணைந்தார்.

xAI நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், AI reasoning மற்றும் கணிதம் சார்ந்த திறன்களை மேம்படுத்தும் ஆராய்ச்சிகளில் அவர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. xAI உருவாக்கிய Grok AI chatbot-ன் வளர்ச்சியிலும் அவரது பங்களிப்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெறும் ஆறு ஆண்டுகளில் இத்தனை பெரிய உயரமா?

AI துறையில் அவரது தொழில்முறை வாழ்க்கை தொடங்கி சுமார் ஆறு ஆண்டுகளே ஆன நிலையில், ரூ.670 கோடி மதிப்பிலான மாளிகையை வாங்கியதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது தொழில்நுட்ப உலகில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த மாளிகையை டோனி வு தான் வாங்கியதாக அவர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article