பெங்களூரு நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வாகன இயக்கத்தைச் சீரமைக்கவும், அங்குள்ள ஐந்து முக்கிய மேம்பாலங்களில் குறிப்பிட்ட வகை வாகனங்கள் செல்வதற்குப் போக்குவரத்துத் துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாகப் போக்குவரத்துப் போலீசார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பல்வேறு மேம்பாலங்களில் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பயண நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

மேம்பால வாரியாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

மைசூர் சாலையில் அமைந்துள்ள பி.ஜி.எஸ். மேம்பாலத்தைப் பொறுத்தவரை, கனரக வாகனங்கள் செல்வதற்கு 24 மணி நேரமும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று சக்கர சரக்கு ஆட்டோக்கள் உட்பட இதர அனைத்து வகையான சரக்கு வாகனங்களும் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் இயங்கத் தடை செய்யப்பட்டுள்ளது.

பீனியா மேம்பாலத்தில் பயணிக்கும் பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோக்களுக்கு 24 மணி நேரமும் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கனரக மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்கள் காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் அங்கு இயங்கக் கூடாது.

எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் அனைத்து வகையான சரக்கு வாகனங்களுக்கும் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இங்கு இருசக்கர வாகனங்கள், பயணிகள் ஆட்டோக்கள் மற்றும் சரக்கு ஆட்டோக்கள் செல்வதற்கு 24 மணி நேரமும் முழுமையான தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சில்க் போர்டில் இருந்து ராகிகுட்டா வரையிலான டபுள் டக்கர் மேம்பாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதற்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவ் நகர் கிராசில் இருந்து வித்யாசில்பா சந்திப்பு வரையிலான சர்வதேச விமான நிலைய மேம்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்வதற்கு 24 மணி நேரமும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வகையான சரக்கு வாகனங்களுக்கும் காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை அமலுக்கு வரும் தேதிகள்

இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, பி.ஜி.எஸ். மேம்பாலம், பீனியா மேம்பாலம், டபுள் டக்கர் மேம்பாலம் மற்றும் சர்வதேச விமான நிலைய மேம்பாலம் ஆகிய நாந்கு மேம்பாலங்களிலும் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மட்டும் செப்டம்பர் 11-ஆம் தேதி முதல் இந்த வாகனப் போக்குவரத்துத் தடை நடைமுறைக்கு வருகிறது என்று காவல் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source: Read Full Article