தமிழகத்தில் இன்று ஒன்பது மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 6.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

வளிமண்டல சுழற்சி நிலவரம்

தற்போது தெற்கு கர்நாடகா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. அதேபோல், இலங்கையின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் 5.8 கிலோமீட்டர் உயரத்தில் மற்றொரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும், வட தமிழக கடலோரப் பகுதிகள் கீழம்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவி வருகிறது.

மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்

இந்த வளிமண்டல மாறுபாடுகள் காரணமாக, இன்று திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, கரூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் சில பகுதிகளிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்தடுத்த நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

நாளை மற்றும் நாளை மறுநாள் தேனி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source: Read Full Article