சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ரயில் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தெற்கு ரயில்வே ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நான்கு முக்கிய ரயில் பாதை விரிவாக்கத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகள் சென்னை மண்டலத்தின் ரயில்வே அமைப்பை மேம்படுத்துவதோடு, பயணிகள் நெரிசலையும் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் மற்றும் ஆதம்பாக்கம் ரயில் நிலையங்கள்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய கிளாம்பாக்கம் இரயில் நிலையப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ரூ.20.82 கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தும் இத்திட்டத்தில், முதலாவது நடைமேடை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதுடன், இரண்டு மற்றும் மூன்றாவது நடைமேடைகளின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ஆகஸ்ட் மாதம் சிஎம்டிஏ அமைக்கும் ஆகாய நடைபாலப் பணிகள் முடிவடைந்ததும், அக்டோபர் மாதத்திற்குள் இந்த ரயில் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளையில், வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தில் ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படாமல் தாமதமாகி வருகிறது. இங்குள்ள வளைவான பகுதியில் ரயில்வே நடைமேடைக்கும் ரயில்களுக்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதற்கான புதிய வடிவமைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி பெற்ற பிறகே, ஆதம்பாக்கம் நிலையத்தில் ரயில்கள் நிறுத்தப்படும் என சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் சைலேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முக்கிய விரிவாக்கத் திட்டங்கள்

சென்னை புறநகர் ரயில் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இரயில்வே வாரியம் ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் நான்கு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மிக முக்கியமானது ரூ.926.52 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் 67.79 கி.மீ நீளமுள்ள அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டமாகும். தற்போது இந்த வழித்தடத்தில் 13 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், புதிய பாதை பயன்பாட்டிற்கு வந்த பின் ரயில்களின் எண்ணிக்கை 80 ஆக உயரும்.

இது ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி போன்ற தொழிற்பேட்டைப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். மேலும், நாள்தோறும் சுமார் 500 மின்சார ரயில்கள் இயங்கும் தெற்கு வழித்தடத்தில் நெரிசலைக் குறைக்க, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.713.5 கோடி மதிப்பீட்டில் நான்காவது ரயில் பாதை அமைக்கும் திட்டம் 2030-க்குள் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன், ரூ.365.42 கோடி மதிப்பீட்டில் அத்திப்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே மூன்றாவது மற்றும் நான்காவது பாதைகளுக்கான டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. மேலும் ரூ.177 கோடி செலவில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையே 9 கி.மீ தூரத்திற்கு ஐந்தாவது மற்றும் ஆறாவது பாதைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பயணிகள் எண்ணிக்கை உயர்வு மற்றும் வசதிகள்

கடந்த நிதியாண்டில் 42.5 கோடியாக இருந்த தெற்கு ரயில்வேயின் பயணிகளின் எண்ணிக்கை, நடப்பு நிதியாண்டில் 47.298 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த அதிகரித்த பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க தெற்கு ரயில்வே சார்பில் 3,559 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதுடன், வழக்கமான ரயில்களில் 1,557 கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டன.

பயணிகள் வசதிக்காக சென்னை மண்டலத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் 12 நடைபாலங்கள், 26 மின் தூக்கிகள் (Lifts) மற்றும் 7 நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கப்பட்டுள்ளன. தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய நடைபாலப் பணி நிறைவடைந்துள்ள நிலையில், நகரும் படிக்கட்டுகளுக்கான பணிகள் நடப்பு நிதியாண்டிற்குள் நிறைவடையும். மேலும், 12 ரயில்வே கேட்கள் மூடப்பட்டு, 300 கி.மீ தூரத்திற்குத் தண்டவாளப் பாதுகாப்பு வேலிகள் மற்றும் 186 கி.மீ தூரத்திற்குப் புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகளும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Source: Read Full Article