கும்பகோணம்: கைலாஷ் யாத்திரைக்காக கும்பகோணம் மற்றும் சென்னையில் இருந்து நேபாளம் சென்ற 57 தமிழர்கள் அங்கு ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இன்று காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் புது டெல்லி வருகின்றனர் என்று தகவல்கள் ெளியாகி உள்ளது.

மீதமுள்ளவர்களை தேடும் பணியில் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த ராணுவத்தினர், பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தன்னார்வ அமைப்பினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கும்பகோணம் நாகேஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் சூப்பர் யாத்ரா ஏஜென்சி என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மூலம் கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 57 பேர் கைலாஷ் யாத்திரைக்காக கடந்த 23-ந் தேதி இரவு புறப்பட்டுச் சென்றனர்.

கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டவர்களுடன் சென்னையில் இருந்து புறப்பட்டவர்களும் இணைந்து பயணம் மேற்கொண்டனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவர்கள், அங்கிருந்து பஸ்கள் மூலம் நேபாள தலைநகர் காத்மாண்டு பகுதிக்கு சென்றனர். தொடர்ந்து அங்கிருந்து 3 பஸ்களில் யாத்திரை பகுதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இந்த நிலையில், நேபாளத்தில் திடீரென பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகள், நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த வெள்ளத்தில் யாத்திரை சென்ற 57 தமிழர்கள் உள்பட ஏராளமானோர் சிக்கினர். கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் அழைத்துச் சென்ற வாகனங்களில் ஒரு பஸ் மட்டும் வெள்ளத்தில் சிக்காமல் இருந்ததாகவும், மற்ற சில வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து நேபாள ராணுவம், பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் களமிறங்கினர். மோசமான வானிலை, தொடர்ந்து பெய்த மழை உள்ளிட்ட காரணங்களால் மீட்பு பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், உயிருடன் இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்கும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

இந்த சூழ்நிலையில், கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் மூலம் யாத்திரை சென்றவர்களில் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சிதம்பரத்தை சேர்ந்த தியாகராஜன் (49), கிருபாகரி (49), பழனியப்பன் (69), கலைமதி (67), முத்துக்குமரேசன் (56), விஜயபுவனேஸ்வரி (55), சாந்தி (47), மாறன் (57), காஞ்சிபுரத்தை சேர்ந்த சத்யா (58), பெங்களூருவை சேர்ந்த கனகசபை (68), ராதை (64), ஓசூரை சேர்ந்த ரகுநாதன் (56), மயிலாடுதுறையை சேர்ந்த ரத்தினகுமார் (65), பூங்குழலி (62), மணிமேகலை (65), திருச்சியை சேர்ந்த சிவரஞ்சனி (46), கற்பகம் (62), வள்ளிநாயகி (62), சென்னையை சேர்ந்த நாவூகபிர்தாஸ் (55), மைதிலி (49) ஆகிய 20 பேர் மீட்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நெய்வேலியை சேர்ந்த திருமாவளவன் (62) நேற்று காலை மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்ததாக அதிகாரிகள் கூறினர். இதன் மூலம் மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.

மீட்கப்பட்ட 21 பேரில் 11 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருசூலி பகுதியில் உள்ள நேபாள ராணுவ முகாமுக்கும், 10 பேர் தனியார் ஹெலிகாப்டர் மூலம் குண்சா பகுதியில் உள்ள நேபாள ராணுவ தள முகாமுக்கும் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். ராணுவ முகாம்களில் பாதுகாப்பாக உள்ள இவர்களை விரைவில் சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காத்மாண்டுவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே வெள்ளத்தில் சிக்கியுள்ள மற்றவர்களை தேடும் பணி நேற்று 2-வது நாளாக தீவிரமாக நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா சார்பில் நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் இந்தியா, சீனா, நேபாளம் ஆகிய 3 நாடுகளின் ராணுவத்தினர், பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

இதன் எதிரொலியாக கும்பகோணத்திலும் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். 2-வது நாளாக நேற்று வருவாய்த்துறை சார்பில் கும்பகோணம் தாசில்தார் பூங்கொடி, சுற்றுலா நிறுவன அலுவலகத்திற்கு நேரில் சென்று யாத்திரை சென்றவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினார். மீட்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தேவையான தகவல்களை பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், கும்பகோணம் சுற்றுலா நிறுவனத்தின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். யாத்திரை சென்றவர்களின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்படாத வகையில் போலீசார் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். நேபாளத்தில் சிக்கியுள்ள அனைவரும் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என்பதே அவர்களது குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நேபாளத்தின் மலைப்பகுதிகளில் தொடர்ந்து நிலவும் மோசமான வானிலை மீட்பு பணிக்கு சவாலாக இருந்தாலும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதால் மீதமுள்ளவர்களும் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் இருந்து சென்று மீட்கப்பட்ட 21 நபர்கள் விமானம் மூலம் இன்று காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து விமானம் மூலம் புது டெல்லி வருகின்றனர். அதன் பின் இடம் கிடைக்கும் விமானங்களில் சென்னை வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Source: Read Full Article