வைகோவை விமர்சித்த திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக போட்டியிட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியை முறித்துக்கொண்டு தவெக கூட்டணியில் மதிமுக இணைந்துள்ளது. இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் செயல்பாடுகளை விமர்சித்து திமுகவின் நாளேடான முரசொலி கட்டுரை வெளியிட்டுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1993 ஏப்ரலில் நடந்த நிகழ்வை 2009 முரசொலியில் எழுதியதை, இப்போது திரும்ப 2026 ஜூலை 11 இல் கொட்டை எழுத்துக்களில் முரசொலியில் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் பிரசுரிக்க என்ன காரணம்? தி.மு.கழக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா? எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.

பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும்

பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம்? கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள். பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும்; என்னைக் காக்கும். ஆனால் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் என் இதயம் தாங்கி அனுபவப்பட்டுவிட்டேன். தெளிந்த நீரோடையைப் போல என் மனம் தூய்மையாக இருக்கிறது. பொய்மை தோற்கும்; மெய்மை இறுதியில் வெல்லும்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் மணிவவாசகத்தை எண்ணி நான் இதை எல்லாம் தாங்கி பழக்கப்பட்டுவிட்டேன். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள். கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்தம்

என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.

2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும். பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது. வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிபிடப்பட்டது கற்பனைதான்.

வாழ்நாளில் நான் செய்த 2 தவறுகள்

நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது என வைகோ தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article