TN weather Rain Update (09-07-2026): காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கோடைகாலம் முடிந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை பொழிந்து வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தினசரி மழையும், குறைவான வெப்ப நிலையும் பதிவாகி வருகிறது.

இந்த நிலையில் தெற்கு குஜராத்திலிருந்து மத்திய கேரளா வரை சராசரி கடல் மட்டத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூலை 9ம் தேதியான இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை பற்றிய அறிவிப்பு

வரும் ஜூலை 12ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்றும் எனினும் சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை நிலவரம்

இன்று (09-07-2026) சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Also Read: கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகளில் ஜூலை 12ம் தேதி வரையும், வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. ஆனால் ஜூலை 10 முதல் 12ம் தேதி வரை வங்கக்கடல் பகுதியான அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேசமயம் இன்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்த நாட்களில் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article