தொடரும் கொலைகள்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தேனியில் ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகேயுள்ள ரங்கநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பியின் மகன்களான் ஸ்ரீஹரிஷ் 6ஆம் வகுப்பும், சபரீஷ் 5ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவர்கள் இருவரும் மாலை 5 மணியளவில் வெளியில் விளையாட செல்வதாக கூறிச் சென்றுள்ளனர். இரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் போடிநாயக்கனூர் ஊரகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

பள்ளி மாணவர்கள் கொலை

அந்த புகாரினை தொடர்ந்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில்,நேற்று மாலை கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்துக் கிணற்றில் இரண்டு சிறுவர்களின் உடல்கள் மிதப்பதாகத் தகவல் கிடைத்தது. தீயணைப்புத் துறையினரின் உதவியோடு மீட்கப்பட்ட உடல்கள், காணாமல் போன ஸ்ரீஹரிஷ் மற்றும் சபரீஷ் என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அதே தெருவைச் சேர்ந்த கேசவ் பாலாஜி (19) என்ற இளைஞர் சிறுவர்களை அழைத்துச் சென்றதாகவும், கூறிய தகவலை அடுத்து கேசவ் பாலாஜியை அழைத்து காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அவரிடம் நடந்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின.

கொலைக்கான காரணம் என்ன.?

புறா பிடித்துத் தருவதாகக் கூறி சிறுவர்களை அழைத்துச் சென்ற கேசவ் பாலாஜி, கிணற்றுக்குள் புறா இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லி, இருவரையும் 150 அடி ஆழக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டுக் கொலை செய்ததாகக் கூறியதைக் கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான இரண்டு சிறுவர்களை கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூதாட்டி அடித்து கொலை

இதே போல தேனியில் வீட்டில் தனியாக வசித்து 60 வயது மூதாட்டி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரிடம் இருந்து 6 பவுன் தங்க நகை மற்றும் ரூபாய் 28 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தேனி நகர் பகுதியில் பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடை தெரு பகுதியில் ராதா என்கிற 60 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இன்று காலை மூதாட்டி ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு இருப்பதாக காவல்துறையினருக்கு வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கொலை செய்தது யார்.?

போலீசார் நடத்திய விசாரணையில் அதிகாலை சுமார் 3 மணி அளவில் மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் வாய் மற்றும் கழுத்துப் பகுதியில் கயிற்றால் இறுக்கி கட்டிக் கொலை செய்துள்ளதாகவும்,மேலும் தலையிலும் பலமாக தாக்கியுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்தும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மூதாட்டியின் விவரங்கள் குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த சுமார் பவுன் தங்க நகை மற்றும் சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போய் இருப்பதாக தெரியவந்துள்ளது.தேனி நகரின் மையப் பகுதியில் அதிகாலையில்,பணம் மற்றும் வகைக்காக மூதாட்டி கொடூரமாக கொலை செய்ய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஒரே நாளில் நடைபெற்ற 3 கொலைகள் தேனி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Source: Read Full Article