டாஸ்மாக்- மதுபான விற்பனை

தமிழகத்தில் சுமார் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் சுமார் 100 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் இனி பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த வகையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதியம் உயர்வு, இஎஸ்ஐ மருத்துவ காப்பீடு என பல அறிவிப்புகளை வெளியிட்டது. இந்த அறிவிப்புகளுக்கு பிறகு டாஸ்மாக் மதுபான பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் எச்சரித்துள்ளது. அந்த வகையில் என்னென்ன தண்டனை என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10- தண்டனை உறுதி

இந்த நிலையில், டாஸ்மாக் வாணிபக் கழக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சுற்றிக்கை வெளியிட்டுள்ளது. அதில், டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை (MRP) விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக நுகர்வோரிடமிருந்து புகார் பெறப்பட்டாலோ அல்லது டாஸ்மாக் அலுவலர்களின் திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் (மேற்பார்வையாளர், விற்பனையாளர் மற்றும் உதவி விற்பனையாளர்) மீது கீழ்க்கண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்:

i. முதல் முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால்:

ஒரு மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். தற்காலிக பணியிடை நீக்க காலமான ஒரு மாதத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது.

ஒரு மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையிலிருந்து அதே மாவட்டத்தில் உள்ள விற்பனை குறைவாக உள்ள வேறு கடைக்கு பணிமாற்றம் செய்து மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.

ii. இரண்டாவது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால்:

மூன்று மாத காலம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். பணியாளரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். மூன்று மாத தற்காலிக பணியிடை நீக்க காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது.

மூன்று மாத பணியிடை நீக்கம் முடிந்த பின், இனிமேல் இதுபோன்ற தவறு செய்யமாட்டேன் என்ற உறுதிமொழி பெற்றுக்கொண்டு, தலைமையக ஒப்புதலுடன், அவர் பணிபுரியும் கடையிலிருந்து அதே மாவட்டத்தில் உள்ள மதுபானக் கிடங்கிற்கு (Depot) பணிமாற்றம் செய்யப்பட்டு, குறைந்தது மூன்று மாதங்கள் அங்கு பணியாற்ற வேண்டும்.

iii. மூன்றாவது முறை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டால்:

சம்பந்தப்பட்ட பணியாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, குற்றக் குறிப்பாணை வழங்கி உள்விசாரணை நடத்த வேண்டும். உள்விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிரந்தரப் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். தற்காலிக பணியிடை நீக்க காலத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படாது

அபராத விவரம்

ரூ.1 முதல் 9 வரை கூடுதலாக விற்கும் நேர்வுகள்

ரூ.1-க்கு ரூ.1000/- வீதம் அதிகபட்சமாக ரூ.9,000/-என்ற வீதத்தில்

ரூ.10 மற்றும் அதற்கு மேல் கூடுதலாக விற்பனை செய்யும் நேர்வுகள்
ரூ.10000/- மட்டும்

விற்பனை செய்த பணியாளருக்கு அபராதத் தொகையில் 60% அப்போது கடையில் உடனிருந்த மேற்பார்வையாளருக்கு அபராதத் தொகையில் 40% மேற்பார்வையாளர் ஆஜரில் இல்லாத பட்சத்தில் விற்பனை செய்த பணியாளர் அபராத தொகையினை முழுவதுமாக (100%) செலுத்த வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article