தமிழகத்தில் அரசியல் மாற்றம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினரும் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. அடுத்தாக அதிமுக எம்எல்ஏக்கள் விராலிமலை தொகுதி விஜயபாஸ்கர். கரூர் எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, எஸ்.பெருந்துறை ஜெயக்குமார், மதுராந்தகம் மரகதம் குமரவேல்,தாராபுரம் பி. சத்யபாமா ஆகியோர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.?

இந்த பரபரப்பான சூழ்நிலையில் தவெக ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவிடம் தவெக ஆட்சிக்கு எதிராக செயல்பட 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஐடிபிஎஸ் அமைப்பை சேர்ந்த திருநாவுக்கரசு, கரூரை சேர்ந்த செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரின் உத்தரவின் பேரில் பேரம் பேசப்பட்டதாக வாக்குமூலம் கொடுத்தாக கூறப்பட்டது.

இதனையடுத்து செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரை போலீசார் தேடி வந்த நிலையில், இருவரும் தலைமறைவானார்கள். கடந்த ஒரு வாரமாக எங்கே இருக்கிறார்கள் என தெரியாத நிலையானது நீடித்து வருகிறது. இந்த நிலையில, கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்ற சென்னை திருவல்லிக்கேணி போலீசார் விசாரணைக்கு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் திங்கட்கிழமை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்ற வகையில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது.

செந்தில் பாலாஜி கைதாவாரா.?

இந்த நிலையில் இன்று விசாரணைக்காக போலீசார் முன்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் இன்று காலை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனவே இன்றைய தினம் ஜாமின் கிடைக்குமா.? அல்லது செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் கைது செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே நேரம் முதலமைச்சர் விஜய் வருகிற 10ஆம் தேதி கரூர் செல்லவுள்ள நிலையில், அதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவு பறந்துள்ளதாக காவல்துறை வட்டார தகவலாக உள்ளது.

Source: Read Full Article