மானிய விலையில் உணவுப்பொருட்கள்

நாடு முழுவதும் ஏழை,எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும், மானிய விலையிலும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் 2 கோடியே 28 லட்சத்து 13 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகள் மூலம் அரிசி, பச்சரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்படுகிறது. இது மக்களுக்கு பெரிய அளவில் உதவியாக உள்ள நிலையில், ஒரு சில கடைகளில் உணவுப்பொருட்கள் எடை குறைவாக இருப்பதாகவும், காலாவதியான சக்கரை, பருப்பும் வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையில் தரமான உணவுப்பொருட்கள்

இந்த நிலையில் தரமான வகையில் அரிசி, பருப்பு, சக்கரை உள்ளிட்ட உணவுப்பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அரசி, கோதுமை ஆகிய உணவுப்பொருட்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்றபடியும், துவரம் பருப்பு ஒரு கிலோவும், சக்கரை இரண்டு கிலோவும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது உணவுப்பொருட்களை வாங்க, தனித்தனி பைகளை எடுத்து செல்ல வேண்டிய நிலையானது உள்ளது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப்பொருட்களை பாக்கெட்டில் அடைத்து வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி அரசி மற்றும் கோதுமையை பாக்கெட்டில் வழங்க முடியாது என்பதால் அந்த பொருட்களை தவிர்த்து மற்ற சக்கரை, பருப்பை பாக்கெட்டில் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

பாக்கெட்டில் சக்கரை, பருப்பு

இது தொடர்பான அறிவிப்பு வருகிற பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், பாக்கெட்டில் பருப்பு மற்றும் சக்கரையை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாமாயில் பாக்கெட்டில் வழங்கப்படுகிறது. எனவே பாக்கெட்டில் உணவுப்பொருட்களை கொடுக்கும் போது அந்த பாக்கெட்டின் மீது உணவுப்பொருட்கள் யாரிடம் வாங்கப்பட்டது.

எப்போது பேக்கிங் செய்யப்பட்டது. காலாவதி தேதி ஆகியவை அச்சிடப்படும் என தெரிவித்தார். அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் பேருக்கு உணவுபொருட்கள் பாக்கெட்டில் வழங்கவுள்ளதால் கூடுதலாக எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழக பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் முதல் பாக்கெட்டில் உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் படிப்படியாக தொடங்கப்படும் என கூறினார்.

Source: Read Full Article