தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.களில் 2026–27 கல்வியாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தேவையான ஆவணங்களுடன் நேரில் அல்லது ஆன்லைனில் விண்ணப்பித்து தொழிற்பயிற்சி வாய்ப்பைப் பெறலாம். தமிழகத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர விரும்பும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருச்செந்தூர், ஏரல், வேப்பலோடை, தூத்துக்குடி (கோரம்பள்ளம்), நாகலாபுரம் உள்ளிட்ட ஐந்து அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 2026–27 கல்வியாண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சேர்க்கையின் மூலம் 8 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களின் கல்வித் தகுதிக்கேற்ப பல்வேறு தொழிற்பயிற்சி பிரிவுகளில் சேர்ந்து பயில வாய்ப்பு பெறுகின்றனர்.

தொழில்துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் இந்த அரசு ஐ.டி.ஐ.களில் வழங்கப்பட்டு வருவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். விண்ணப்பதாரர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ் (TC), சமூகச் சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 மட்டும் (GPay, டெபிட்/கிரெடிட் கார்டு உள்ளிட்ட ஆன்லைன் முறைகளிலும்) செலுத்தினால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஐ.டி.ஐ.களில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், தொழில்துறை சார்ந்த நடைமுறைப் பயிற்சிகள், திறன் மேம்பாட்டு பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், தொழிற்கல்வியை விரும்பும் மாணவர்களுக்கு அரசு ஐ.டி.ஐ.கள் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன.

மேலும் விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடர்பான தகவல்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அரசின் தொழிற்பயிற்சி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

Source: Read Full Article