இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டியில் ஆடி வருகிறது. டி20 தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஜிம்பாப்வே சென்றுள்ளது.

தொடரை வெல்லுமா இந்தியா?

ஜிம்பாப்வே அணியுடன் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்று ஹராரேவில் நடக்கிறது. அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடரில் ஒரு வெற்றிகூட பெறாத இந்திய அணி ஜிம்பாப்வே மண்ணில் மீண்டும் தனது வெற்றியைத் தொடங்கியுள்ளது.

பேட்டிங் பலம்:

இதையடுத்து, இன்று நடக்கும் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணி இந்த போட்டியிலும் களமிறங்கும் என்று கருதப்படுகிறது. முதல் போட்டியில் அசத்திய சூர்யவன்ஷி இன்றைய போட்டியிலும் தனது அதிரடியைத் தொடர்வார் என்று கருதப்படுகிறது. அபிஷேக் சர்மா இந்த போட்டியில் தனது அதிரடிக்குத் திரும்புவார் என்று கருதப்படுகிறது. கேப்டன் ஸ்ரேயாஸ், திலக் வர்மா, ரிங்குசிங், ஷிவம் துபே என்று பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது.

ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, ப்ரையன் பென்னட், பென் கரன், மருமணி, டையன் மையர்ஸ், ரியான் பர்ல் என மிகப்பெரிய பேட்டிங் பட்டாளமே உள்ளனர். இவர்கள் தங்களது பேட்டிங் திறனை முழுமையாக வெளிக்காட்டினால் இவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்.

பந்துவீச்சு பலம்:

பந்துவீச்சைப் பொறுத்தமட்டில் இந்திய அணியில் கடந்த போட்டியில் பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ் சிறப்பாக வீசினார்கள். ஷிவம் துபே கூடுதல் பந்துவீச்சாளராக சிறப்பாக வீசினார். இன்றைய போட்டியிலும் அவர்கள் சிறப்பாக பந்துவீச வேண்டியது அவசியம்.

ஜிம்பாப்வே அணியும் பந்துவீச்சில் சிறந்த அணியாகவே உள்ளது. முசரபானி, ரிச்சர்ட் இங்கரவா, இவான்ஸ், நியாம்ஹியூரி, சிக்கந்தர் ராசா பந்துவீச்சில் பலமாக உள்ளனர். இவர்கள் இந்திய பேட்டிங் பட்டாளத்தை திறம்பட எதிர்கொண்டால் நிச்சயம் இந்திய அணிக்கு சவால் அளிக்கலாம்.

ஸ்ரேயாஸ் ஆர்வம்:

ஒரு கேப்டனாக இரண்டு தொடர்களை இழந்த பிறகு முதன்முறையாக டி20 தொடரை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்ல ஆர்வமுடன் அணியை வழிநடத்துவார் என்று கருதப்படுகிறது. இன்றைய போட்டியை ஃபேன்கோட் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்க்கலாம்.

இந்திய அணியை இந்த தொடருக்கு கம்பீருக்கு பதிலாக லட்சுமணன் பயிற்சியாளராக பயிற்சி அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article