தவெக ஆட்சி அமைவதற்கு ஆதரவு கொடுத்த காங்கிரஸ் கட்சி, முதல்வர் விஜய் தலைமையிலான அரசு மீது ஆதிக்கத்தை தொடங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஏற்கனவே, ஆதரவு கொடுத்ததற்கு ஆட்சியில் பங்கு கொடுத்து, முக்கியமான இரண்டு அமைச்சரவையை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்திருக்கிறார் முதல்வர் விஜய். இந்நிலையில், வாரியத் தலைவர் நியமனம் தொடங்கி அரசு வழக்கறிஞர்கள் வரை பெரிய பட்டியலை தவெக அரசிடம் வழங்கி, தங்களுடைய கட்சிக் காரர்களையும் ஆதரவாளர்களையும் அரசு பதவிகளில் நியமிக்க காங்கிரஸ் கட்சி நிர்பந்தித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியிருக்கிறது.

அமைச்சர் நிர்மல்குமாருக்கு பட்டியலுடன் கடிதம் எழுதிய காங்கிரஸ்

கடந்த ஜூன் 1ஆம் தேதி சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமாருக்கு காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கிரிஷ் ஜோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சூரஜ் ஹெட்ஜ், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா ஆகியோர் ஒரு பட்டியலுடன் கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றனர். அந்த கடிதத்தில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சட்டத்துறை தலைவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான குழு, தமிழ்நாட்டிலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் நியமிக்க வேண்டிய தகுதி வாய்ந்த வழக்கறிஞர்களின் பட்டியலை இறுதி செய்துள்ளதாகவும், இதனுடன் இணைக்கப்பட்ட பட்டியலில் குறிப்பிட்டுள்ள நபர்களை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் உச்சநீதிமன்றத்திலும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க வேண்டி பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

150க்கும் மேற்பட்ட பெயரை குறிப்பிட்டு கடிதம் – அதிர்ச்சியில் தவெக

அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 8 பேருக்கு உச்சநீதிமனறத்தில் அரசு பதவி வேண்டுமென்றும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 53 பேருக்கும், 34 மாவட்ட நீதிமன்றங்களில் 120 பேருக்கும் என மொத்தம் 181 பேரின் பெயரை குறிப்பிடப்பட்டு சிடிஆர் நிர்மல்குமாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மட்டும் 13 பேரின் பெயர்களை தேசிய காங்கிரஸ் பரிந்துரைத்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்துக்கு காங்கிரஸ் பரிந்துரைத்தவர்கள் யார்?யார்?

தமிழ்நாடு அரசின் உச்சநீதிமன்ற கூடுதல் தலைமை வழக்கறிஞராக (AAG) ஆனந்த் கண்ணன் என்பவரின் பெயரை தேசிய காங்கிரஸ் பரிந்துரைத்திருக்கிறது. அதே நேரத்தில், ஓமர் ஹோடா என்பவரை கூடுதல் தலைமை வழக்கறிஞராகவோ அல்லது அதற்கு இணையான பதவியிலோ நியமிக்க சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக Standing Counsel நியமனத்திற்கு அமித் பண்டாரி, ஷரிக் அகமது பெயர்களும் Panel க்கு எக்‌ஷா பாக்‌ஷி, சஞ்சய் பதக், பிரியன்ஷா ஷர்மா, யாஷா ஜோஸ்ரி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் என்னென்ன ?

அதே நேரத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் நியமனத்திற்கு சந்திரமோகன், அருண் நட்ராஜன், கிருஷ்ண குமார் ஆகியோரது பெயர்களும் சிறப்பு வழக்கறிஞர்கள் நியமனத்திற்கு கனகராஜ், கலைவாணன், சசிகுமார் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்க பெரிய பட்டியலையே காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு அனுப்பியிருக்கிறது.

பரிந்துரைத்தவர்கள் யார், யார் ?

உச்சநீதிமன்றம் முதல் மாவட்ட நீதிமன்றங்கள் வாரியாக காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட வழக்கறிஞர்கள் பட்டியலில் உள்ள ஒவ்வொரு பெயர்களையும் பரிந்துரைத்தவர்கள் யார், யார் என்ற விவரமும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, காங்கிரஸ் எம்.பி சுதா, முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ கந்தசாமி, கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் நிர்வாகி திரவியம், அமைச்சர் விஸ்வநாதன், அமைச்சர் ராஜேஷ்குமார், திருநாவுக்கரசர், செல்வபெருந்தகை, ஜோதிமணி என 180 பெயர்களுக்கும் பரிந்துரைத்தவர்கள் பட்டியலும் நீண்டுள்ளது. மாவட்ட நீதிமன்ற நியமனங்களுக்கு அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர், எம்.பிக்கள், நிர்வாகிகள் என பல்வேறுபட்ட பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கும் அழுத்தம் கொடுக்கும் காங்கிரஸ்

இதே போன்று தமிழ்நாடு அரசின் வாரியத் தலைவர், உறுப்பினர், அரசின் குழுக்கள் உள்ளிட்டவற்றில் காங்கிரஸ் நிர்வாகிகள், ஆதரவாளர்களை நியமிக்கவும் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆட்சியில் பங்கு வகிக்கும் அதே நேரத்தில் அரசின் நிர்வாகத்தின் பல பிரிவுகளிலும் தங்களின் ஆட்சிகளை நியமிக்க காங்கிரஸ் கட்சி இந்த முறை பெரும் முயற்சி எடுத்துள்ளது இந்த நீண்ட பரிந்துரை பட்டியல் மூலம் வெளிப்பட்டிருக்கிறது.

என்ன செய்யப் போகிறார் விஜய் ?

காங்கிரஸ் வழக்கறிஞர்கள் மட்டுமே கொடுத்த பட்டியலிலேயே 150க்கும் மேற்பட்ட பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சி என்ன பரிந்துரை என்ற பெயரில் என்ன மாதிரியான அழுத்தங்களை கொடுக்கப் போகிறது என தவெக தலைமை அதிர்ச்சியடைந்து வருகிறது.

காங்கிரஸ் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்றால் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ள விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் இதேபோன்றதொரு பெரிய பட்டியலை தயார் செய்துக்கொடுக்கும். அதே நேரத்தில் வெளியில் இருந்து தவெக-வை ஆதரித்து வரும் இடதுசாரிகளும் மதிமுகவும் கூட இதேபோன்றதோரு நியமனங்கள் தொடர்பான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கலாம் என்பதால் காங்கிரஸ் கொடுத்த பட்டியல்களை வைத்துக்கொண்டு தவெக அரசு குழம்பி வருவதாகவும், இதில் முதலமைச்சர் விஜய் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்றும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

ஏற்கனவே, தமிழக வெற்றிக் கழகத்திற்காக நீதிமன்றங்களில் வாதாடியவர்கள், போராடிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டவர்கள் பதவியை எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில், காங்கிரஸ் கட்சி 150க்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை அனுப்பி, அவர்களை அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பதவிகளில் நியமிக்க பரிந்துரைத்துள்ளது தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Source: Read Full Article