தேர்தல் தோல்வியால் அதிமுகவில் மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க அதிமுக திட்டமிட்ட நிலையில், விஜய்யின் சூறாவளியில் சிக்கி 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டது . இதனால் அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடும் அதிருப்தி அடைந்தனர். எனவே தவெகவிற்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் இடம்பிடித்து விடலாம் என அதிமுக எம்எல்ஏக்கள் திட்டமிட்டனர். இதற்கு ஏற்ப எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து, சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த எடப்பாடி பழனிசாமி அந்த 25 எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளின் பதவிகளை பறித்து அதிரடியாக உத்தரவிட்டார்.

கட்சி பதவியை பறித்த இபிஎஸ்

இதனால் 6 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதேநேரம் மற்ற எம்எல்ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றனர். இருந்த போதும் அந்த நிர்வாகிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் பதவியானது மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி வழங்கிய பதவிகளை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும், அதிமுக தொண்டராக கட்சியில் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் எந்த வித கட்சி நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமலும், எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்த கூட்டத்திலும் பங்கேற்காமல் இருந்து வந்தனர். அந்த வகையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் மீது எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் பதவி வழங்க கூடாது

அந்த வகையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்பு ரீதியிலான 85 மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் தோல்வி, கட்சியின் செயல்பாடு, கட்சியின் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். அந்த வகையில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளும் பல தகவல்கள் கூறியிருந்தனர். கட்சிக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மீண்டும் அவர்களுக்கு பதவி வழங்க கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று முன் தினத்தோடு இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்துள்ளது.

ஆகஸ்ட்டில் செயற்குழு கூட்டம்

இந்த நிலையில், ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்த வேலுமணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், கேசி வீரமணி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் உள்ளார். எனவே அவர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.அதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுகவை வலுப்படுத்தும் வகையில், அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைவசப்படுத்த எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்துள்ளதாகவும், அந்த வகையில்,அதிருப்தியாளர்களின் பதவியை பறித்த பின்பு ஆகஸ்ட் மாதத்தில் செயற்குழுவை கூட்ட எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article