தஞ்சாவூர்: தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவாக உள்ளதால் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பதிவில்லா பெட்டிகளில் கூடுதல் ஆர்பிஎப் கண்காணிப்பு, டிக்கெட் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, ராமேஸ்வரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் நீண்டதூர ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்து வருவதாக ரயில் பயணிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக முன்பதிவில்லா பெட்டிகளில் ஒழுங்கின்மை நிலவுவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தென்னக ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தின் தொழில் நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைவாய்ப்புக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதால், நீண்டதூர ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக, குறிப்பாக ராமேஸ்வரம், செந்தூர், புவனேஸ்வர் உள்ளிட்ட நீண்டதூர ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாகவும், முன்பதிவில்லா பெட்டிகளில் பயணம் செய்வோர் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் கூறுவதன்படி, முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் அனுமதியின்றி அமருதல், நுழைவு வாயில்கள் மற்றும் கழிவறை பகுதிகளில் கூட்ட நெரிசல், தூய்மைக் குறைபாடு, பயண ஒழுங்குகளைப் பின்பற்றாத சிலரின் செயல்பாடுகள் ஆகியவை குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.

மேலும், சில பயணிகள் ரயில்களில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் மற்றும் பிற ஒழுங்கு மீறல்களும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இதுபோன்ற செயல்கள் காரணமாக, குறிப்பாக இரவு நேரங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பாதுகாப்பு குறித்த அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அண்மையில், ராமேஸ்வரம் – புவனேஸ்வர் விரைவு ரயிலில் கும்பகோணத்திலிருந்து கடலூர் வரை குடும்பத்துடன் பயணம் செய்ததாகக் கூறப்படும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர், சில பயணிகளின் ஒழுங்கற்ற நடத்தையால் குழந்தைகள் அச்சமடைந்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், டிக்கெட் பரிசோதகர்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் மட்டுமே சோதனை மேற்கொள்வதாகவும், முன்பதிவில்லா பெட்டிகளில் போதிய கண்காணிப்பு இல்லை என்ற கருத்தையும் சில பயணிகள் முன்வைத்துள்ளனர்.

இரவு நேரங்களில் திருட்டு, கைப்பேசி மற்றும் உடைமைகள் மாயமாகும் சம்பவங்கள், அவசரநேர உதவி கிடைப்பதில் சிரமம் போன்ற புகார்களும் பயணிகள் மத்தியில் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், முன்பதிவில்லா பெட்டிகளில் தனிப்பட்ட பாதுகாப்பு ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும், முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி பயணம் செய்வதைத் தடுக்க வேண்டும், ரயில்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும், அனுமதியற்ற விற்பனையாளர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும், தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் மற்றும் பெண்கள், முதியவர்கள் பாதுகாப்புக்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பாபநாசம் பகுதியைச் சேர்ந்த ரயில் பயணிகள், தமிழ்நாட்டில் இயங்கும் நீண்டதூர ரயில்களில் அனைத்து பயணிகளும் பாதுகாப்பாகவும், அச்சமின்றியும் பயணம் செய்யும் சூழலை உறுதி செய்ய தென்னக ரயில்வே திருச்சி கோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article