ஆட்டோவை வழிமறித்த காவலர்கள்

நெல்லை டவுன் பாறையடி ராஜாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். ( எ ) மாரியப்பன் ( வயது 30 ) இவர் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். ஜூன் 28 தச்சநல்லூர் - டவுன் சாலையில் உள்ள குருநாதன் கோவில் திருப்பு முனை அருகே அவர் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது , அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரது ஆட்டோவை நிறுத்தி விசாரித்துள்ளனர்.

அவர் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக கூறி, மேலும் ஆட்டோவை இயக்க அனுமதிக்காமல் காவல் துறை தரப்பில் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஓட்டுநரின் மனைவி கூறுகையில் ;

சவாரி ஏதுமின்றி காலியாக வந்த தனது கணவரின் வாகனத்தை மட்டும் காவலர்கள் திட்டமிட்டு மறித்துள்ளனர். மற்ற வாகனங்களை அனுமதித்து விட்டு என் வண்டியை மட்டும் ஏன் நிறுத்துகிறீர்கள் ? என்று கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த காவலர்கள், அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி, சாதிய ரீதியாகவும் மிகக் கேவலமாக பேசி வன்முறையை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் அவரது கைபேசியைப் பறித்து தரையில் போட்டு உடைத்ததுடன், வாகனத்தின் சாவியையும் பிடுங்கிக் கொண்டு சிறையில் அடைத்து விடுவதாக அச்சுறுத்தியுள்ளனர். காவல் துறையினரின் இந்தத் தாக்குதலாலும், பொது வெளியில் இழைக்கப்பட்ட சாதிய அவமானத்தாலும் எல்லையற்ற மன உளைச்சலுக்கு ஆளான ஓட்டுநர் ' என்னை விட்டு விடுங்கள், இல்லையென்றால் தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கதறியுள்ளார்.

அதற்கு அங்கிருந்த காவலர்கள் , கொளுத்திக் கொண்டு சாவு' என்று தற்கொலைக்குத் தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் விரக்தியடைந்த அவர், அங்கிருந்த ஒரு பெண் காவலர் உட்பட 6 காவலர்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்டுள்ளார். அவர் உடலெங்கும் தீப்பற்றி எரிந்த கொடூரமான தருணத்தில், அங்கிருந்த காவலர்கள் வேடிக்கை பார்த்தார்களே தவிர, உடனடியாகத் தீயை அணைக்க முற்படவில்லை என்று மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

சுமார் 79 சதவீதத்திற்கும் மேலாக உடல் கருகிய நிலையில், அவர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மறைந்த ஓட்டுநருக்கு 7 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத்தின் ஒற்றை வாழ்வாதாரமாகத் திகழ்ந்த அவரது இழப்பு அந்தக் குடும்பத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article