தஞ்சாவூர்: தஞ்சை பெரியகோவிலில் மாயமான அஷ்டதிக் பாலகர் சிலைகள் குறித்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தொல்லியல், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வரும் 28-க்குள் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கும் தஞ்சாவூர் பெருவுடையார் (பெரியகோவில்) கோவிலில் அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளில் சிலைகள் மாயமான விவகாரம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்திய தொல்லியல் துறை (ASI) மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

சோழப் பேரரசர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெரியகோவில், உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலையின் அடையாளமாக திகழ்கிறது. ஆகம விதிகளின்படி கோவிலின் எட்டு திசைகளிலும் இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன் மற்றும் ஈசானன் ஆகிய அஷ்டதிக் பாலகர்களுக்கான தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் தற்போது, இந்திரன், எமன், நிருதி மற்றும் குபேரன் ஆகிய நான்கு சன்னதிகளில் சிலைகள் இல்லாமல் பூட்டிய நிலையில் இருப்பதாகவும், மீதமுள்ள நான்கு சன்னதிகளில் உள்ள சிலைகளும் போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக பக்தர்கள் முறையாக வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாகப் பராமரிக்கவும், சேதமடைந்த சிலைகளுக்கு மாற்றாக புதிய சிலைகளை நிறுவ இந்திய தொல்லியல் துறை தேவையான அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் ஆகியோர், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், இந்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல அதிகாரிகள் மற்றும் கோவிலின் பரம்பரை அறங்காவலர் ஆகியோர் இணைந்து கோவிலில் நேரில் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை ஜூலை 28-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி, உதவி கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, முதுநிலை பராமரிப்பு அலுவலர் சோபிதா, இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் கார்த்திகேயன் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்டோர் கோவிலின் அஷ்டதிக் பாலகர் சன்னதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, "அஷ்டதிக் பாலகர்களுக்கான எட்டு சன்னதிகளில் தற்போது நான்கு சிலைகள் மட்டுமே உள்ளன. மற்ற நான்கு சிலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே மாயமாகிவிட்டன. அவற்றை மீண்டும் பிரதிஷ்டை செய்வது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என்றார்.

இந்த ஆய்வு, தஞ்சாவூர் பெரியகோவிலின் பாரம்பரியச் சிறப்பையும், தொன்மை வாய்ந்த சிற்ப மரபையும் பாதுகாக்கும் முயற்சியில் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. மாயமான சிலைகள் குறித்து முழுமையான உண்மை வெளிச்சத்துக்கு வருவதுடன், சன்னதிகள் மீண்டும் வழிபாட்டுக்கு உகந்த வகையில் சீரமைக்கப்பட்டு, தேவையான சட்ட அனுமதிகளுடன் பிரதிஷ்டை நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மற்றும் பாரம்பரிய ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Source: Read Full Article