விழுப்புரம்: "மனுவைக் கொடுத்துவிட்டுப் பல காலம் காத்துக்கிடக்கும் காலம் எல்லாம் இப்போது இல்லை; உங்கள் தேவைகளை ஆட்சியரிடம் நேரடியாகக் கொடுங்கள், உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் உறுதியளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெடிமொழியனூர் கிராமத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த், புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி முறைப்படி திறந்து வைத்தார்.

மக்கள் குறைகேட்கும் கூட்டம்: உடனுக்குடன் தீர்வு

திறப்பு விழாவைத் தொடர்ந்து, ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் பொதுமக்கள் பங்கேற்ற குறைகேட்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் நேரடியாகப் பங்கேற்ற அமைச்சர் ஆனந்த், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுடன் கலந்துரையாடினார்.

கூட்டத்தில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகளும், அதற்கு அமைச்சர் அளித்த அதிரடி பதில்களும்:

கால்நடை மருத்துவமனை கோரிக்கை:

நெடிமொழியனூர் பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்குக் கால்நடை மருத்துவமனை வசதி செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அதற்குப் பதிலளித்த அமைச்சர், "பொதுமக்களின் இந்தக் கோரிக்கை உடனடியாக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, விரைவில் கால்நடை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என உறுதியளித்தார்.

கலங்கலான குடிநீர் புகார் – உடனடி ஆய்வு உத்தரவு:

கிராமத்தில் கடந்த சில நாட்களாகக் குடிநீர் கலங்கலாக வருவதாகச் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்டவுடன், "குடிநீர் விநியோகம் குறித்து இன்றே நேரில் ஆய்வு மேற்கொண்டு, கிராம மக்களுக்குச் சுத்தமான குடிநீர் தங்குதடையின்றி வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

சாலை வசதி மற்றும் உட்கட்டமைப்பு:

கிராமத்திற்குப் புதிய சாலை வசதி வேண்டும் என மக்கள் கோரியபோது பேசிய அமைச்சர், "மனுவைக் கொடுத்துவிட்டுப் பல காலம் காத்திருக்கும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது. உங்கள் கிராமத்தின் தேவைகளை மனுவாகத் தயாரித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகக் கொடுங்கள். முன்வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நிதிநிலைக்கு ஏற்ப நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைந்து தீர்க்கப்படும்" என்றார்.

"அரசியல் பேச வரவில்லை!" - அமைச்சரின் கட் அண்ட் ரைட் பதில்

நிகழ்வின் போது, இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒருவர், திமுக ஆட்சியில் தடுப்பனை அமைக்க ஆய்வு நடத்தியும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், திருமண மண்டபம் அமைத்துத் தர வேண்டும் என்றும் பேசினார்.

அவரை இடைமறித்துப் பேசிய அமைச்சர் ஆனந்த், "நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. மக்களின் குறைகளைத் தீர்க்கவே வந்துள்ளேன். அரசியல் பேசாமல் உங்கள் குறைகளை மட்டும் மனுவாக அளியுங்கள், நிச்சயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தீர்க்கமாகப் பதிலளித்து மனுவைப் பெற்றுக்கொண்டார்.

அமைச்சரின் இந்த அதிரடி அணுகுமுறையும், கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கண்ட விதமும் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Source: Read Full Article