உலகின் தவிர்க்க முடியாத அணியாக திகழ்வது இந்திய கிரிக்கெட் அணி. 21ம் நூற்றாண்டில் பல முன்னணி அணிகளும் சறுக்கலைச் சந்தித்தாலும் எந்த சறுக்கலும் இல்லாமல் பயணித்து வரும் அணியாக இந்திய அணி திகழ்கிறது. அதற்கு கடந்த 2000 காலகட்டம் முதலே இந்திய அணியை அடுத்தடுத்த தலைமுறைக்கு ஏற்றவாறு கட்டமைத்ததும் ஒரு காரணம் ஆகும்.

தலைவலி தரும் மிடில் ஆர்டர்:

இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய அணியும் தலைசிறந்த அணியாக இருந்தாலும், மிகப்பெரிய கவலையாக இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் உருவெடுத்துள்ளது. பொதுவாக இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்த நிலையில், அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி மாற்றிக்காட்டியது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் அந்த நிலைக்கு இந்திய அணி திரும்புகிறதோ? என்ற கேள்வியை உண்டாக்கியுள்ளது.

முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பக்கபலமாக மொத்த ரசிகர்கள் கூட்டம் இருந்தாலும் அவர்களின் வயதைக் காரணம் காட்டி பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணித் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் அவர்களை 2027 உலகக்கோப்பையில் விளையாட வைக்காமல் இருப்பதற்கு காய் நகர்த்தி வருவதாகவே தகவல்கள் வெளியாகி வருகிறது. அவர்களின் காய் நகர்த்தலுக்கு ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இந்த தொடரில் நன்றாகவே பதிலடி தந்துள்ளனர்.

ஃபினிஷர் இனி யார்?

ஆனால், அவர்களுக்கு பிறகு மிடில் ஆர்டரில் இந்திய அணியை காப்பாற்றுவது யார்? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், இஷான் கிஷன் என ஒரு பெரிய பட்டாளமே இருந்தும் அவர்களால் இந்த தொடரில் சோபிக்க முடியவில்லை. இதற்கு முன்பு இந்திய அணியில் இந்த பணியை கடந்த பல ஆண்டுகளாக முன்னாள் கேப்டன் தோனி செய்து கொண்டிருந்தார்.

அவரது ஓய்வுக்கு பின்பும் டாப் ஆர்டரின் பக்கபலத்துடன் மிடில் ஆர்டர் சறுக்கல் இல்லாமலே சென்று கொண்டிருந்தது. ஆனால், அனுபவம் வாய்ந்த வீரர்களாக இருந்தும் தற்போதைய வீரர்களால் நிலைத்தன்மையுடன் நெருக்கடியான சூழலில் ஆட முடியாமல் இருப்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

காத்திருக்கும் உலகக்கோப்பை:

உலகக்கோப்பை 50 ஓவர் தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் தடுமாறுவது எச்சரிக்கை மணியாகவே கருத வேண்டியது அவசியம் ஆகும்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் அடுத்தாண்டு உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் தனது பலத்தை பல மடங்கு அதிகரித்துக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இந்திய அணியின் பிரதான மிடில் ஆர்டராக திகழும் ஹர்திக் பாண்ட்யா அவ்வப்போது காயத்தில் சிக்குவது அணியில் அவரது நிலைத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. ரிஷப் பண்டிற்கும் அதே நிலையாக உள்ளது.

அணியில் வாய்ப்பு கிடைக்கும் வீரர்களுக்கும் தங்களது திறனை நிரூபிக்க தொடர்ச்சியான வாய்ப்புகளும் மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, வலது - இடது பேட்டிங் கூட்டணி குறைவாக இருப்பதும் அணியின் தோல்விக்கு காரணமாக அமைகிறது.

சரி செய்வார்களா?

இந்திய அணி உலகக்கோப்பைக்கு முன்பு ஒருநாள் போட்டிகளில் குறைந்த அளவே ஆட உள்ள நிலையில், இந்திய அணி தனது மிடில் ஆர்டரை சரி செய்யாவிட்டால் மிகப்பெரிய சறுக்கலைச் சந்திக்க வேண்டிய சூழல் உண்டாகும். இதை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் - அணித் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் உணர வேண்டியது அவசியம் ஆகும்.

Source: Read Full Article