விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகள், 'மஞ்சள் நோய்' (Yellow Leaf Disease) தாக்குதலால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் கரும்புகளை வெட்ட ஆலை நிர்வாகங்கள் மறுத்து வரும் நிலையில், கவலையடைந்த விவசாயிகள் வேறு வழியின்றி தங்களின் விளைநிலத்திலேயே கரும்புகளை டிராக்டர் மூலம் உழுது எருவாக மாற்றி அழித்து வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

300 ஏக்கரில் கரும்பு சாகுபடி:

விழுப்புரம் அருகேயுள்ள ஏனாதிமங்கலம், திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், சிறுவானூர், செம்மார் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக இப்பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதற்காகவும், வெல்லம் காய்ச்சுவதற்காகவும் கரும்பு நடவு செய்வதை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். நடப்புப் பருவத்தில், ஒரு ஏக்கருக்குச் சுமார் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் விவசாயிகள் முதலீடு செய்துள்ளனர்.

கரும்பைச் சுருட்டிய 'மஞ்சள் நோய்':

இந்த நிலையில், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள கரும்புகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் திடீரென ‘மஞ்சள் நோய்’ தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்கிய கரும்புகள் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல், அதன் தோகைகள் (சோலைகள்) முற்றிலும் காய்ந்து கருகின. விவசாயிகள் தங்களின் சொந்த செலவில் பல்வேறு வகையான செயற்கைப் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கித் தெளித்தும், இந்த நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்தவோ அல்லது குணப்படுத்தவோ முடியவில்லை. இதனால் கரும்புகள் அனைத்தும் சக்கையாக மாறி, மகசூல் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை ஆலைகள் மறுப்பு - எருவாகும் கரும்புகள்:

வழக்கமாகக் கரும்பு அறுவடைப் பருவத்தின்போது செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளிட்ட ஆலைகளின் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு, கரும்புகளை வெட்டுவதற்கான அனுமதியை (Permit) வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்ட கரும்புகளை வெட்டவும், அதனை ஆலைக்கு எடுத்துச் செல்லவும் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆலைகளும் எடுக்க மறுத்து, வெல்லம் காய்ச்சவும் பயன்படாத நிலையில், கரும்புகளை வயலிலேயே விட்டால் அடுத்தப் பயிர் செய்ய முடியாது என்பதால், விவசாயிகள் மிகுந்த வேதனையுடன் தங்களின் கரும்புகளை டிராக்டர் மற்றும் ஏர் கொண்டு உழுது, நிலத்திற்கே எருவாக மாற்றி அழித்து வருகின்றனர்.

ஏனாதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர், ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து வளர்த்த தனது 5 ஏக்கர் கரும்பினை வெட்ட முடியாமல், வேறு வழியின்றி விளைநிலத்திலேயே டிராக்டர் விட்டு உழுது அழித்துள்ளார். இந்தத் துயரக் காட்சி அப்பகுதி விவசாயிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கை:

"ஏக்கருக்கு 75 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து, இரவு பகலாகப் பாடுபட்டு வளர்த்த கரும்புகளைக் கண்ணெதிரே நாமே அழிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கூட்டுறவு ஆலைகளும் எங்களைக் கைவிட்டுவிட்டன" என்று இப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசும், வேளாண்மைத்துறையும் உடனடியாக தலையிட்டு, விழுப்புரம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பு பயிர்களை இழந்து தவிக்கும் விவசாயிகளின் விளைநிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரியப் பயிர் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Source: Read Full Article