" புதிய போட்டோ ஷீட் ஆர்டர் வந்துள்ளது "

கோவை மாவட்டம் தடாகம் அடுத்த மடத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 24 வயதுடைய பிரவீன். இவர் குடும்பத்துடன் தங்கி போட்டோ கிராபராக பணியாற்றி வந்திருக்கிறார். கடந்த ( ஜூலை 2) ஆம் தேதி , பிரவீன் 'புதிய போட்டோஷூட் ஆர்டர் வந்துள்ளது ' என்று குடும்பத்தினரிடம் கூறி விட்டு ஒட்டன் சத்திரம் சென்றுள்ளார்.

ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே வழக்கு பதிவு செய்த போலீசார் பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே கிணத்துக் கடவு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

" நாங்கள் தான் கொலை செய்தோம் "

அந்த சடலத்தை அடையாளம் கண்டதில் , அது மாயமான போட்டோகிராபர் பிரவீனுடையது என்பது உறுதியானது. தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில் கோவை நீதிமன்றத்தில் கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் ( வயது 26 ) மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ( வயது 27 ) ஆகியோர் நேரில் ஆஜராகி, "பிரவீனை நாங்கள் தான் திட்டமிட்டு கொலை செய்து ரயில்வே தண்டவாளத்தில் வீசினோம்" என்று கூறி சரணடைந்தனர். இதையடுத்து போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று நடத்திய முதல் கட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

இன்ஸ்டாகிராம் காதல்

கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் என்ற வாலிபர் கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார்.

அதே நேரத்தில், அந்தப் பெண் போட்டோகிராபரான பிரவீனுடனும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் கடந்த பிப்ரவரி மாதம் மனோஜ்குமாருக்கு தெரிய வந்துள்ளது. எனவே தனது காதலுக்கு பிரவீன் இடையூறாக இருப்பதாக நினைத்த மனோஜ் குமார், அவரை கொலை செய்ய முடிவு செய்திருக்கிறார்.

இதற்காக, பிரவீனின் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடர்பு கொண்டு , "ஒட்டன் சத்திரத்தில் அவசர போட்டோஷூட் உள்ளது உடனே வாருங்கள் " என்று கூறி அழைத்துள்ளார்.

" உங்களை வீட்டிற்கு அழைத்து செல்கிறோம் "

அதை நம்பி சென்ற பிரவீனிடம், இரவு நேரமாகி விட்டதால் மறுநாள் காலை போட்டோஷூட் நடத்தலாம் என்றும், அதுவரை தனது வீட்டில் தங்கி கொள்ளுமாறும் மனோஜ் குமார் கூறியுள்ளார். அங்கு சென்ற பிரவீனுக்கு மனோஜ் குமாரும், அவரது நண்பர் கார்த்திகேயனும் சேர்ந்து அளவுக்கு அதிகமாக மது கொடுத்துள்ளனர்.

பின்னர், "உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறோம்" என்று கூறி காரில் ஏற்றிச் சென்று, நள்ளிரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தி கயிற்றால் பிரவீனின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

பின்னர், இந்தக் கொலையை தற்கொலையாக சித்தரிக்கும் நோக்கில், கிணத்துக்கடவு அருகே போத்தனூர் ரயில்வே எல்லைக்குட்பட்ட தண்டவாளத்தில் அவரது உடலை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அந்த வழியாக வந்த ரயில், பிரவீனின் உடலின் மீது ஏறிச் சென்றதால் அவரது தலை துண்டிக்கப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரவீன் மாயமான வழக்கையும், ரயில்வே தண்டவாளத்தில் கிடைத்த சடலத்தையும் தொடர்புபடுத்தி தடாகம் மற்றும் போத்தனூர் ரயில்வே போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் போலீசார் தங்களை நெருங்கி வருவதை உணர்ந்த மனோஜ்குமார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது.

காதல் பிரச்சனையில் வாலிபரை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article