சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பிறந்தநாள் விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஏழை எளிய மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணையும் நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்விக்கு முன்னுரிமை - மாணவர்களுக்குப் பாராட்டு

நிகழ்ச்சியின் தொடக்கமாக, நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் நினைவு பரிசுகளும் கல்வி உபகரணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.

"இன்றைய மாணவர்களே நாளைய இந்தியாவின் தூண்கள்; கல்வி ஒன்றே ஒரு தலைமுறையின் வாழ்க்கையை உயர்த்தும் பேராயுதம்" எனக் கூறி, மாணவர்கள் மேன்மேலும் உயர்கல்வி கற்றுச் சமூகத்திற்குப் பங்காற்ற வேண்டும் என வாழ்த்தினார்.

மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைப்பு

விழாவின் முக்கிய அம்சமாக, தமிழக எதிர்க்கட்சியான திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களது தாய் கட்சிகளிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

மாவட்டச் செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த இணைப்பின் போது, புதிய உறுப்பினர்களுக்குக் கட்சியின் பொன்னாடை மற்றும் கொடித் துண்டுகளை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாற்றுக்கட்சியினரின் இந்த திடீர் விலகலும் தவெகவில் பெருமளவில் இணைந்ததும் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"60 ஆண்டு கால குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்" - மா.செ கோபிநாத் ஆவேசம்

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாவட்டச் செயலாளர் கோபிநாத், மாநிலத்தில் ஆட்சி அமைத்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவர் பேசியதாவது: "கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தவர்கள், சாதாரண மக்களின் நலனையோ, அடிப்படைத் தேவைகளையோ முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை. மக்கள் நலனை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, தங்களது குடும்ப நலனிலும் சொந்தப் சுயலாபத்திலும் மட்டுமே அக்கறை காட்டி வந்துள்ளனர்.

இன்று இங்கு திரண்டுள்ள இந்தக் கூட்டம் பணத்தாலோ அல்லது ஊழல் பலத்தாலோ கூட்டிய கூட்டமல்ல. இது தமிழக மக்களின் உண்மையான உணர்வாலும், மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் எழுச்சியாலும் உருவான மக்கள் கூட்டம்! நமது தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தமிழகத்தில் தொடர்ந்து தங்களின் பேராதரவை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.

நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு

விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜய் மற்றும் நிர்வாகிகள் விழா அமைப்பினரை ஏனைய தலைவர்கள் பாராட்டினர். இந்நிகழ்ச்சியில் தவெக மாவட்ட மாணவரணி செயலாளர் கார்த்திக், மாவட்ட துணைச் செயலாளர், சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம்குமார் உட்படக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

Source: Read Full Article