புதுடெல்லி: சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ. சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள், ராஜமார்கயாத்ரா மொபைல் செயலி மூலம் உள்ளூர் பயணச்சீட்டை டிஜிட்டல் முறையில் வாங்கலாம். இது அந்த மாதத்தில் அந்தந்த சுங்கச்சாவடி வழியாக வரம்பற்ற பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் மக்களுக்கு தனி மொபைல் ஆப்

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கக் கட்டணம் மற்றும் பாஸ் தொடர்பான விதிமுறைகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.) அவ்வப்போது பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது.

அந்த வகையில், சுங்கச்சாவடிகள் அருகே வசிக்கும் உள்ளூர் மக்களுக்குப் பெரும் பயன் அளிக்கும் வகையில் 'ராஜமார்கயாத்ரா' (Rajmargyatra) மொபைல் செயலி மூலம் டிஜிட்டல் முறையிலேயே 'உள்ளூர் பயணச்சீட்டு' (Local Pass) பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அலைச்சல் இனி இல்லை!

இதற்கு முன்பாக, சுங்கச்சாவடி அருகே வசிக்கும் மக்கள் உள்ளூர் பாஸ் பெற வேண்டுமென்றால், நேரடியாகச் சுங்கச்சாவடி அலுவலகத்திற்குச் சென்று வரிசையில் நின்று குடியிருப்பு சான்றிதழ் மற்றும் வாகன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் இனி அந்த அலைச்சல் தேவையில்லை. சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள், தங்கள் செல்போனில் உள்ள 'ராஜமார்கயாத்ரா' செயலி மூலமாகவே சில நிமிடங்களில் ஆன்லைனில் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

இந்தச் செயலி, வாகன ஓட்டிகளின் 'வாஹன்' (VAHAN) தரவுத்தளத்தில் உள்ள முகவரி, வாகன எண் மற்றும் ஃபாஸ்டேக் (FASTag) விவரங்களைத் தானாகவே சரிபார்த்து, தகுதியின் அடிப்படையில் பாஸை உடனடியாக வழங்கிவிடும்.

மாதக் கட்டணம் ரூ.350 மட்டுமே!

சொந்தப் பயன்பாட்டிற்காக வாகனங்களை வைத்திருக்கும் உள்ளூர்வாசிகள், மாதத்திற்கு ரூ.350 மட்டும் கட்டணமாகச் செலுத்தி இந்த லோக்கல் பாஸைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த பாஸ் மூலம் அந்த குறிப்பிட்ட மாதத்தில், அந்தச் சுங்கச்சாவடி வழியாக எத்தனை முறை வேண்டுமானாலும் தடையின்றி பயணம் செய்ய முடியும்.

அபராத நோட்டீஸுக்கு முற்றுப்புள்ளி!

தற்போது தானியங்கி முறையில் வாகன எண் மற்றும் ஃபாஸ்டேக்கை ஸ்கேன் செய்யும் நவீன சுங்க வசூல் முறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுங்கக் கட்டணம் செலுத்தாமல் செல்பவர்களுக்குத் தானாகவே 'இ-நோட்டீஸ்' (e-Notice) மூலம் அபராதம் அனுப்பப்படுகிறது.

சுங்கச்சாவடி அருகே வசிப்பவர்கள் பலரும் முறையான பாஸ் இல்லாமல் சென்று வந்ததால், அவர்களுக்கு அதிக அளவில் அபராத நோட்டீஸ்கள் சென்று கொண்டிருந்தன. இந்தச் சிக்கலுக்கும், அலைச்சலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவே இந்த எளிய டிஜிட்டல் பாஸ் முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விரைவில் அமல்!

இந்த டிஜிட்டல் லோக்கல் பாஸ் வசதி முதற்கட்டமாக, டெல்லியில் உள்ள முண்ட்கா-பக்கர்வாலா சுங்கச்சாவடியில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளுக்கும் இது படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

தமிழகத்தில் நெமிலி, செனசமுத்திரம் மற்றும் பரனூர் உள்ளிட்ட பல சுங்கச்சாவடிகளில் தடையற்ற சுங்க வசூல் முறையைச் செயல்படுத்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே, மிக விரைவில் தமிழகத்திலும் இந்த ஆன்லைன் பாஸ் முறை நடைமுறைக்கு வர உள்ளது.

Source: Read Full Article