தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை அமைத்துள்ளது. செங்கோட்டையன் தவிர மற்ற அனைவரும் முதன்முறையாக அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புகாரில் சிக்கும் அமைச்சர்கள்:

முதன்முறையாக எம்எல்ஏ ஆன உடனே அமைச்சராக பொறுப்பேற்றிருப்பதால் அவர்களுக்கு நிர்வாக சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம், பொறுப்பில் அமர்ந்துள்ள அமைச்சர்கள் சிலர் மிகவும் பொறுப்புடன் பணியாற்றி வரும் சூழலில், சில அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. சில துறைகளின் அமைச்சர்கள் அந்த துறை சார்ந்த தொழில் நிறுவனங்களிடம் பரிசு பொருட்கள் கேட்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

3 மாதங்கள் வரை டைம்:

ஊழல், சிபாரிசை அறவே ஒழிக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக உள்ள விஜய் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் சற்று அதிருப்தி அடைந்துள்ளார். இந்த சூழலில், ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகளையும் உளவுத்துறை மூலம் கண்காணித்து வருகிறார். தற்போது அமைச்சர்கள் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், அமைச்சரவையில் இருப்பவர்களின் செயல்பாடுகளை இன்னும் 3 மாதத்திற்கு பிறகு மதிப்பீடு செய்யவும் திட்டமிட்டுள்ளார் விஜய்.

இதில் குற்றச்சாட்டுகள், பொறுப்பாக செயல்படாதது உள்ளிட்ட செயல்பாடுகளில் மிகவும் மோசமாக உள்ள அமைச்சர்களின் பதவியை பறிக்கவும் விஜய் மிகவும் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதங்களில் அதிகளவு முதலமைச்சர் விஜய்யிடம் புகாருக்கு ஆளாகியிருப்பது தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவும், தொழிலாளர் நலத்துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர் முகமது பர்வேஸ் ஆவார்கள்.

அமைச்சரவையில் மாற்றம்?

இன்னும் 3 மாதங்களுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது முதலே அமைச்சர்கள் பலரும் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சி அமைச்சர்களது செயல்பாடுகளையும் முதலமைச்சர் விஜய் கண்காணித்து வருவதால் அவர்களும் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது தவெக-வில் அதிமுக-வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உள்பட பலரும் இணைந்து வருகின்றனர். இவர்கள் அமைச்சர்களுடன் நெருக்கமான உறவு கொண்டாடி வருகின்றனர். இதன்மூலமாக அமைச்சர்கள் வழியாக பல்வேறு ஒப்பந்தங்களை கைப்பற்ற காய் நகர்த்தி வருகின்றனர்.

இதுவும் முதலமைச்சர் விஜய்யின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதனால், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அமைச்சர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக அமைச்சரவையில் இன்னும் 3 மாதங்களுக்கு பிறகு அதாவது 2027ம் ஆண்டில் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்பது ஏறத்தாழ உறுதியாக உள்ளது.

Source: Read Full Article