தஞ்சாவூர்: தஞ்சாவூர் டிவிஎஸ் பல்நோக்கு மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி. சாத்தப்பன் மீது அவதூறு பரப்பும் வகையில் தஞ்சை பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மருத்துவச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தஞ்சை மாநகரம் முழுவதும் தென் இந்திய ஃபார்வர்ட் கட்சியைச் சேர்ந்த ஆர். சங்கர், ஏ. ரமேஷ் ஆகியோரின் பெயரில் டிவிஎஸ் பல்நோக்கு மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டி.வி. சாத்தப்பன் மீது அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மருத்துவச்சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய மருத்துவச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ஆசனவாய் குடல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து நலமாக வீடு திரும்பிய பெண் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் பல்வேறு மருத்துவமனைகளில் கதிரியக்க மற்றும் வேதிச் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த பெண்ணின் இறப்புக்கு ஆரம்ப சிகிச்சை அளித்த மருத்துவரை காரணம் காட்ட முயல்வது வேதனைக்குரியது.

புற்றுநோயின் தீவிரத்தன்மைக்கும் கதிரியக்க மற்றும் வேதிச் சிகிச்சைகளின் பக்கவிளைவுகளுக்கும் அறுவை சிகிச்சைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை அறிந்தும், தீய உள்நோக்கத்துடன் மருத்துவர் டி.வி. சாத்தப்பன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளதாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

இதுபோன்ற பொய்ப் பரப்புரைகளில் ஈடுபடுவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முதற்கட்ட சட்ட நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்திய மருத்துவச்சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய மருத்துவச்சங்க தஞ்சை தலைவர் டாக்டர் சரவணவேல் தெரிவிக்கையில், “மருத்துவர்கள் நேரம் காலம் பாராது ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றப் போராடுகிறார்கள். உண்மைக்கு மாறாக அவதூறு பரப்பும்போது அவர்களின் அர்ப்பணிப்பும், உழைப்பும் பறிபோகிறது” என்று தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் எச்சரிக்கை

மேலும் டிவிஎஸ் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர் T.V. சாத்தப்பனின் சட்ட ஆலோசகர் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் கா.குழந்தைவிக்ரம் கூறியுள்ளதாவது,

தஞ்சை டிவிஎஸ் பல்நோக்கு மருத்துவமனையின் மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் T.V. சாத்தப்பன் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், தென் இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியைச் சேர்ந்த R. சங்கர் மற்றும் A. ரமேஷ் ஆகியோரால் தஞ்சை முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அவதூறு போஸ்டர்களுக்கு வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

ஏற்கெனவே, இத்தகைய சட்டவிரோதச் செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து எனது சார்பாக இவர்களுக்கு வழக்கறிஞர் அறிவிப்பு (Advocate Notice) அனுப்பப்பட்டிருந்தது. அதை மீறியும் தொடர்ந்து மருத்துவமனையின் புகழைக் கெடுக்கும் நோக்கில் செயல்படுவது சட்டக் குற்றமாகும்.

எங்களது சட்டப்பூர்வ நோட்டீஸையும் மீறி அவதூறு பரப்பி வரும் R. சங்கர், A. ரமேஷ் மற்றும் இதன் பின்னணியில் உள்ள நபர்கள் மீது கடுமையான சிவில் மற்றும் குற்றவியல் (Civil & Criminal Defamation) சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடரப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர் டி.வி.சாத்தப்பன் தஞ்சையின் சீனியர் மருத்துவர். புகழ் பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். பல பிரபல மருத்துவர்களுக்கு ஆசிரியர் முன்னோடி மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 50 ஆண்டு கால மருத்துவ சேவையாற்றி வரும் இவர் வசதியற்றவர்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திய நிகழ்வுகளும் ஏராளமாக உண்டு. தஞ்சை மருத்துவக்கல்லூரி ஓய்வு பெற்ற பேராசிரியர்மற்றும் துறைத் தலைவராக இருந்தவர். ஆயிரக்கணக்கான ஆபரேஷன்கள் செய்தவர்

இலவச மருத்துவ முகாம்கள் மேற்ொண்டு பலருக்கும் இலவச மருத்துவ சேவை அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற இவரது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதால் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Source: Read Full Article