தஞ்சாவூர்: பிராய்லர் கோழி உற்பத்தியாளர்கள், அரசு அறிவித்த தீவன கட்டுப்பாட்டு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 31) முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற கோழி இறைச்சி விற்பனை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகத் தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

பின்னணி மற்றும் வணிகர்களின் கோரிக்கைகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிராய்லர் கோழிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் நீண்டநாட்களாக எதிர்கொண்டு வரும் முக்கியப் பிரச்சினை குறித்து, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் துரைராஜ் நிருபர்களிடம் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: "தமிழகத்தில் செயல்பட்டு வரும் பிராய்லர் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், கோழிகளை விற்பனைக்காக வியாபாரிகளிடம் ஒப்படைக்கும் சில மணி நேரங்களுக்கு முன்பாக அவற்றுக்கு அதிகளவில் தீவனங்களை வழங்குகின்றனர்.

இதனால் கோழிகளின் எடை செயற்கையாக அதிகரிக்கிறது. ஆனால், வியாபாரிகள் அதை வாங்கிச் சென்று விற்பனை செய்வதற்குள் தீவனம் செமிக்காமலும், எடையில் பெரும் இழப்பு ஏற்பட்டும் வியாபாரிகளுக்குக் கடுமையான நிதி இழப்பு ஏற்படுகிறது. மேலும் இதனால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் நிலை உருவானது.

இதைக் கட்டுப்படுத்த, கோழிகளை விற்பனைக்கு அனுப்புவதற்கு 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனக் கட்டுப்பாட்டை (Feed Restriction) அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்."

காலவரையற்ற போராட்ட அறிவிப்பு

இந்த நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், நுகர்வோர் மற்றும் வியாபாரிகளின் நலனைப் பாதுகாக்கவும் வேறு வழியின்றி இன்று ஜூலை 31-ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் கோழி இறைச்சி விற்பனையை முழுமையாக நிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கோழி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் கோழி இறைச்சி விற்பனை பாதிக்கப்படும் சூழல் உருவானது.

கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவின் எழுத்துப்பூர்வ உறுதி

போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் அவசர ஆலோசனை மேற்கொண்டு கோழி வணிகர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இறைச்சிக்காகக் கோழிகளை லாரிகளில் ஏற்றி அனுப்பும்போது, அரசு மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்த நெறிமுறைகளின்படி, 8 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்தி விடுவதாகவும், முறையான தீவனக் கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றுவதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளனர்.

இவர்களின் இந்த உறுதியான அறிவிப்பையும், அறிக்கையையும் ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு, பொதுமக்கள் மற்றும் உணவகங்களுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்று தொடங்கவிருந்த காலவரையற்ற போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

"கோழி உற்பத்தி நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை. இதைச் சம்பந்தப்பட்ட கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. கோழி வணிகர்கள் கூட்டமைப்பு கோரிக்கையின் தீவிரத்தைப் உணர்ந்து, பல மாவட்டங்களில் கால்நடைத் துறை அதிகாரிகளைக் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள் தற்போது உத்தரவிட்டுள்ளனர்.

தற்போது கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழுவினர் 8 முதல் 12 மணி நேரத் தீவனக் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த வாக்குறுதியை உற்பத்தியாளர்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதை களத்தில் இறங்கி கால்நடைப் பராமரிப்புத் துறை அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கண்காணிக்க வேண்டும்.

போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதால், இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எப்போதும் போலக் கோழி இறைச்சி கடைகள் இயங்கும் என்றும், நுகர்வோருக்குச் சீரான முறையில் கோழி இறைச்சி விநியோகம் செய்யப்படும் என்றும் கோழி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article