காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்ததும், அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற சிறப்புடையதுமான இத்தலத்திற்கு, முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையான இன்று ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோயில் வரலாறு மற்றும் தல பெருமை

வல்லன் என்ற அசுரனை முருகப்பெருமான் வதம் செய்து அருள் பாலித்ததால் இத்தலம் 'வல்லக்கோட்டை' என்று பெயர் பெற்றது. கருவறையில் ஏழு அடி உயரத்தில் கம்பீரமாக காட்சிதரும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்ததாகும். மேலும், தேவர்களின் தலைவனான இந்திரன் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு இந்திராணியை கரம்பிடித்த புராணச் சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. இதனால் இத்தலம் சிறந்த 'கல்யாண பரிகாரத் தலமாக' விளங்குகிறது.

வாரந்தோறும் இக்கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில், திருமண வரம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்களும், திருமணம் கை கூடி முடிந்தவர்களும் பெருமளவில் கலந்துகொள்கின்றனர். இதனாலேயே "வந்தாரை வாழ வைக்கும் வல்லக்கோட்டை முருகன்" என்ற சிறப்புப் பெயரும் இத்தலத்திற்கு உண்டு. அதுமட்டுமன்றி, இங்கு செய்யப்படும் 'சத்ரு சம்கார யாகம்' மிக முக்கிய பரிகாரமாகப் பார்க்கப்படுகிறது. திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், சின்னத்திரை கலைஞர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் இங்கு வந்து வழிபட்டு வாழ்வில் வளர்ச்சியடைந்துள்ளனர். புதிய திரைப்படங்களைத் தொடங்குவதற்கு முன்பாக திரைப் பிரபலங்கள் இக்கோயிலுக்கு வந்து அருள் பெற்றுச் செல்வது வழக்கமாகும்.

செவ்வாய்க்கிழமை சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும்

செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலையிலேயே திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, மங்களகரமாக 'கோ பூஜை' நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கருவறையில் உள்ள மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்திற்குப் பிறகு, முருகப்பெருமான் மஞ்சள் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அருள் பாலிக்க, பக்தர்களின் "அரோகரா" கோஷத்துடன் பொது தரிசனம் தொடங்கியது. அதேபோல், உற்சவர் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கும் காலையில் பால் அபிஷேகம் செய்யப்படடு, சிறப்பு 'மந்திர புஷ்ப பூஜை' மற்றும் அழகிய மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

முருகனுக்குரிய உகந்த நாள் என்பதால் வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களின் வசதிக்காக, மண்டல இணை ஆணையர் சி. குமரதுரை அறிவுறுத்தலின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ. செந்தில்குமார் தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சிறப்பாகச் செய்திருந்தார். மேலும், கோயில் வளாகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு, வருகை தந்த பக்தர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகளும், தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.

Source: Read Full Article