தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூர், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்து மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

ரூ.35 கோடி விலை பேசப்பட்டதுதான் உண்மையான குதிரை பேரம்

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மாணிக்கம் தாகூர், "தமிழகத்தில் கடந்த 50 நாட்களாக குதிரை பேரம் குதிரை பேரம் என்று பேசி வந்த நிலையில், தற்போது தான் உண்மையாகவே எம்.எல்.ஏ ஒருவரை விலைக்கு வாங்க முயன்றதாகப் புகார் எழுந்துள்ளது. சும்மா பேச்சுக்காகக் குதிரை பேரம் என்று கூறாமல், முதல் முறையாக குதிரை பேரம் மூலமாக எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க இளையராஜாவிடம் ரூ.35 கோடி விலை பேசியது தான் உண்மையான குதிரை பேரம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொய்யாகக் குதிரை பேரம் என்று வாயில் வடை சுடுவது போன்று இல்லாமல், இது மிக முக்கியமான வழக்கு என்பதால், இதனை அரசு சரியான முறையில் கையாள வேண்டும். 234 எம்.எல்.ஏக்களில் ஒரு எம்.எல்.ஏவை விலைக்கு வாங்க முயன்றதை யார் செய்திருந்தாலும், காவல்துறை இதற்கு முக்கியத்துவம் கொடுத்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல்கள் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். எதிர்காலம் இல்லாத கட்சியை விட்டுவிட்டு, வேறு கட்சிக்கு மாறிப் போவது என்பது தனி விவகாரம்" என்று குறிப்பிட்டார்.

கனிமொழிக்கு பதில் மற்றும் அதிமுகவின் நிலை

தொடர்ந்து பேசிய அவர், "அ.தி.மு.கவில் இருந்து த.வெ.கவிற்கு மாறுவது குறித்துப் பேசியவர், அது எம்.ஜி.ஆர் அ.தி.மு.கவோ அல்லது ஜெயலலிதா அ.தி.மு.கவோ கிடையாது; எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உள்ள அ.தி.மு.கவில் இனி கடை தேறாது என முடிவு செய்துதான் த.வெ.கவில் இணைகிறார்கள், இது எப்படி குதிரை பேரம் ஆகும்? தமிழ்நாட்டில் கட்சி மாறுதல் என்பது புதிதல்ல, அனைத்து கட்சியினரும் முன்பு பல்வேறு கட்சிகளுக்கு மாறியுள்ளனர். வாஷிங் மெஷின் மாறுதல் எனக் கூறும் கனிமொழி அவர்கள், ஒருமுறை பின்னால் திரும்பிப் பார்க்க வேண்டும்; அல்லது உடன் பக்கத்தில் இருப்பவர்களைப் பார்த்தால், அவர்களே வேறு கட்சியில் இருந்து வந்தவர்களாகத்தான் இருப்பார்கள்" என்றார்.

த.வெ.க - காங்கிரஸ் கூட்டணி மற்றும் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்

"தமிழக வெற்றி கழகம் புதியதாக, நேர்மையான கட்சியாகத் தொடங்கப்பட்டு இருக்கிறது. விஜய் தலைமையில் அமைந்துள்ள இந்தக் கூட்டணியில் காங்கிரஸும் அங்கம் வகித்து வருகிறது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் காரணமாகத் தற்போது மாநில அரசுக்கு 5,000 கோடி ரூபாய் கூடுதல் செலவு இருந்தாலும், ஏழை எளிய மக்களின் வேலை வாய்ப்புக்காகத் தமிழக அரசு அதனை ஏற்று நடத்தி வருகிறது. மிக விரைவில், இன்னும் மூன்று ஆண்டுகளில் ராகுல் காந்தி பாரதப் பிரதமர் ஆன பிறகு இத்திட்டத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தமிழ்நாடு அரசுக்குரிய 5,000 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். தமிழகத்தில் விஜய் தலைமையிலான ஆட்சி அமையும்" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேகதாது விவகாரம்: செங்கல் வைக்கவும் மோடியின் அனுமதி வேண்டும்

மேகதாது அணை விவகாரம் குறித்துப் பேசிய மாணிக்கம் தாகூர், "மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடோ அல்லது கர்நாடக மாநிலமோ அணை கட்ட ஒரு செங்கல் வைக்க வேண்டும் என்றாலும் அதற்குப் பிரதமர் மோடி தான் அனுமதி தர வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தமிழக மக்களுக்குத் துரோகம் செய்யாமல் நடுநிலையாக இருக்க வேண்டும். மேகதாது விவகாரத்தில் பிரதமர் மோடியிடம் பேசித் தீர்வு காண தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தயாராக உள்ளாரா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Source: Read Full Article