BJP DMK Alliance: கூட்டணியில் இணைந்தால் தவெகவிற்கு குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் எனவும் திமுகவிற்கு பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாம்.

உறுதியாகும் பாஜக - திமுக கூட்டணி?

சர்வாதிகார ஆட்சி, மக்கள் விரோத ஆட்சி மற்றும் மதவாத கட்சி என, கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜகவை நோக்கி திமுக எறியாத வசைகளே இல்லை. நாட்டின் வேறு எந்த கட்சியும் முன்னெடுக்காத வகையில் பாஜக மற்றும் மோடி எதிர்ப்பை ஸ்டாலின் முன்னெடுத்து நடத்தினார். அதன் விளைவாக 2019, 2021 மற்றும் 2024 ஆகிய மூன்று தேர்தல்களில் பெரும் வெற்றியையும் ஈட்டினார். ஆனால், ஆட்சி அதிகாரத்தை இழந்த பிறகு திமுகவின் நிலைப்பாடு மெல்ல மெல்ல மாற தொடங்கியுள்ளது. பாஜக எதிர்ப்பு என்பதை கைவிட்டு, குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் நட்பு சக்தியாக மாறலாம் என அறிவாலயம் பரிசீலித்து வருகிறதாம். அதன் வெளிப்பாட்டைதான் அண்மைக்காலமாக ஸ்டாலின் மற்றும் உதயநிதி போன்றோரின் உப்புசப்பு இல்லாத அறிக்கைகளில் காண முடிகிறதாம். இதனால் பரம எதிரிகளாக கருதப்பட்ட திமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் பேசப்படுகிறது.

பேச்சுவார்த்தை தீவிரம்..!

கடந்த 2001-2004ம் ஆண்டு காலகட்டத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்ததால் தான் மாநிலத்தில் வலுவாக செயல்பட முடிந்தது. 2 எம்.எல்.ஏக்களை மட்டுமே கொண்டுள்ள விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் எல்லாம், மாநில அமைச்சரவையில் இருக்கும்போது, 30 எம்.பிக்களை கொண்டுள்ள நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறக்கூடாதா? என்பதே உடன்பிறப்புகளின் எண்ணமாக உள்ளதாம். மாறும் சூழலுக்கு முடிவெடுப்பதே அரசியல் புத்திசாலித்தனம் என கருணாநிதி போன்றோர் பேசியதையும் சுட்டிக்காட்டுகின்றனர். அதே நிலைப்பாட்டில் தான் பாஜகவும் திமுகவை அணுகி வருகிறதாம். கொள்கை கூட்டணி என ஸ்டாலினை சூழ்ந்திருந்த பெரும்பாலான கட்சிகள் கழன்று ஓடிய நிலையில், உங்களுக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் உறுதியாக நிற்போம் என கூறி பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

”நிதி, கல்வி, ரயில்வே துறைகள் ரெடி” - பாஜக ஆஃபர்

கடந்த மே மாத இறுதியில் ஸ்டாலின் குடும்பத்துடன் கூர்க் சென்றபோதே, கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். திமுக குறிப்பிடும் குறைகளை அணுகி தீர்வு காண தயார் எனவும், அதன் பிறகு தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், “அமைச்சரவையில் இடம்பெற்று நிதி, கல்வி மற்றும் ரயில்வே போன்ற முக்கிய இலாகாக்களை திமுக பெற்றுக்கொண்டால், தமிழ்நாட்டில் இணை அரசாங்கத்தையே நடத்தலாம்” எனவும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாக வார இதழ் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை கூட்டணி என பாராமல் திமுகை தனக்கான பாதுகாப்பாக கருதலாம் எனவும் டெல்லி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

இதையும் படியுங்கள்: MK Stalin: ”பாஜக, ஒன்றிய அரசு, ராகுல் காந்தி” இல்லாத ஸ்டாலின் அறிக்கை - நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என முழக்கம்

TVK-க்கு குடைச்சல் கொடுக்கவும் தயார்

அமைச்சரவையில் வலுவான இடத்தை கொடுப்பது மட்டுமின்றி தவெகவிற்கு குடைச்சல் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அஜெண்டாவும் திமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பான தகவலின்படி, “கரூர் சிபிஐ விவகாரம், குதிரைபேர விவகாரத்தில் நடவடிக்கை, வாய்ப்பிருந்தால் ஆட்சிக்கே சிக்கல், ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் 2029ம் ஆண்டிலேயே சட்டமன்ற தேர்தல்” போன்ற கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டுள்ளனவாம். அவை அனைத்திற்கும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முடிவிலேயே பாஜக - திமுக கூட்டணிக்கான பல முக்கிய சமிக்ஞைகள் தெரிய வரும் என கூறப்படுகிறது.

எச்சரிக்கும் உடன்பிறப்புகள்:

அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நேரத்தில் எதிர்காலத்தை பற்றி யோசிக்காமல், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது திமுகவிற்கு பெரும் பிரச்னையாக மாறக்கூடும் என உடன்பிறப்புகள் எச்சரிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த சிறுபான்மையின சமூக வாக்குகளும் தவெக பக்கம் செல்லக்கூடும். கூட்டணியால் தேசிய அளவில் காங்கிரசை வீழ்த்த முடிந்தாலும், சொந்த மாநிலத்தில் பெரும் பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது. பாஜகவுடன் கைகோர்த்து திமுகவும் மாநில உரிமைகளை பறிக்கிறது, நிதி ஒதுக்காமல் வஞ்சிக்கிறது என தவெகவால் எளிதாக பழிசுமத்த முடியுமென குறிப்பிடுகின்றனர். இதனால், திமுகவின் முடிவு என்னவாக இருக்கும் என்பது? தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article