AIADMK: அதிமுகவின் மாவட்ட வாரியான நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

பொதுக்குழுவிற்கு தயாராகும் அதிமுக..!

தமிழ்நாட்டை மிக நீண்ட காலம் ஆண்ட கட்சி என்ற பெருமையை கொண்ட அதிமுக, அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, எஸ்.பி, வேலுமணி தலைமையிலான 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கட்சி இரண்டு பிரிவுகளாக செயல்படுவது அம்பலமானது. அதோடு, பரம எதிரியான திமுகவுடன் கைகோர்த்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முயன்றதாகவும் அதிருப்தியாளர்களால் குற்றம்சாட்டப்பட்டது. இதன் காரனமாகவே விஜய் அரசுக்கு ஆதரவளித்ததாகவும், அதிமுக தோல்வி குறித்து பொதுக்குழுவை கூட்டி விவாதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தான், பொதுக்குழுவை கூட்டவும், அங்கு தனக்கு சாதகமான முடிவுகளை எட்டவும், கட்சிக்குள் மறுசீரமைப்பு பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிதறிக்கிடக்கும் மூத்த நிர்வாகிகள்

கட்சி தலைமையின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டினார். பலர் நீண்டகாலமாக வகித்து வந்த பதவிகளையும் பறித்தார். பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். ஆனால், அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த அதிகாரம் மிகுந்த பதவிகளுக்குப் பதிலாக வெறும் அலங்கார பதவிகளையே ஒதுக்கினார். அதிலும் சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. இதையடுத்து சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதுபோக இசக்கி சுப்பையா உள்ளிட்ட மேலும் 4 அதிமுக எம்.எல்.ஏக்களும் பதவியை துறந்து தவெகவில் ஐக்கியமாகினர். மறுமுனையில் எடப்பாடி கொடுத்த பதவிகளை ஏற்கமாட்டோம் என எஸ்.பி. வேலுமணி, தங்கமணி போன்ற முக்கிய முன்னாள் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். சி.வி. சண்முகம் எந்தவொரு முடிவையும் அறிவிக்காமல் அமைதியாக உள்ளார்.

டெல்லிக்கு சிக்னலும்.. உஷாரான எடப்பாடியும்..

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தலைமையை மாற்றாவிட்டால் அதிமுகவின் மூலம் மாநிலத்தில் வலுபெறலாம் என்ற பாஜகவின் கனவு பலிக்காது என அதிருப்தியாளர்கள் டெல்லிக்கு தகவல் தெரிவித்துள்ளனராம். இந்த நகர்வுகளை உணந்த எடப்பாடி பொதுக்குழுவை கூட்டி மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வாகி தனது பலத்தை அதிருப்தியாளர்களுக்கு நிரூபிக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், தற்போதைய நிலையில் பொதுக்குழுவை கூட்டினால் அது தனக்கே ஆபத்தாக அமையக்கூடும் என உணர்ந்தே, கட்சி மறுகட்டமைப்பு பணிகளை திரைமறைவில் எடப்பாடி பழனிசாமி தீவிரப்படுத்தியுள்ளாராம்.

இதையும் படியுங்கள்: JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் - பிரச்னை செஞ்சது யார்? உண்மையை போட்டுடைத்த இயக்குனர் எச். வினோத்

மாவட்ட நிர்வாகிகள் உடன் சந்திப்பு:

அந்த வகையில் தான் மாவட்ட நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சந்தித்து வருகிறாராம். அதில் பங்கேற்கும் தனக்கு ஆதரவான பொதுக்குழு நிர்வாகிகளின் விவரங்களை குறித்துக்கொண்டு, கூட்டத்தை புறக்கணித்த அதிருப்தியாளர்கள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை அதிரடியாக பறித்து வருகிறாராம். அந்த வகையில் தனக்கான பெரும்பான்மையை உறுதிசெய்த பிறகு அதிமுக பொதுக்குழுவை கூட்டி, மீண்டும்பொதுச்செயலாளராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியுமென கருதுகிறாராம். இதனால் அடுத்த சில மாதங்களில் அதிமுக பல அதிரடியான மாற்றங்களை காணும் என கூறப்படுகிறது.

Source: Read Full Article