தவெகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்

தமிழகத்தில் திமுக- அதிமுக என இரு கட்சிகள் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக நடிகர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கைப்பற்றி அசத்தியது. இதனால் இரு திராவிட கட்சிகளும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் அதிமுக தலைமைக்கு எதிராக ஒரு பிரிவினர் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். அந்த வகையில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான அணி தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.

ஒரு கட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்களில் விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அதே நேரம் அதிமுகவில் இருந்த மாஜி அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத், சிவபதி, வளர்மதி உள்ளிட்ட ஏராளமானவர்கள் தவெகவில் இணைந்தனர்.வ

வேதனையில் கடம்பூர் ராஜூ

தவெகவில் இணைந்து இரு மாதங்களை நெருங்கி வரும் நிலையில், இன்னும் முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்யை சந்திக்க முடியாத நிலையில் தான் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெகவில் இணைந்த போது அமைச்சர்களை நேரில் சந்தித்த நிலையில், தற்போது அவர்களை சந்திப்பதே கடும் சவாலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில், தென் மாவட்டத்தில் முக்கிய தலைவராக இருந்தவர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட கடம்பூர் ராஜூக்கு ஜெயலலிதா அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனையே தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் கடம்பூர் ராஜூ.

தவெகவில் உரிய மரியாதை இல்லை

ஆனால் கடந்த 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்த கடம்பூர் ராஜூ 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தென் மாவட்டத்தில் எந்தவித செல்வாக்கு இல்லையென நினைத்தவர், திடீரென தவெகவில் இணைந்தார். ஆனால் தவெகவில் இணைந்த போதே பல மணி நேரம் பனையூர் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி இல்லாமல் வாசலில் காத்திருக்க வைக்கப்பட்டார். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை மட்டும் சந்தித்தார். ஆனால் தற்போது வரை தவெக தலைவர் விஜய்யை சந்திக்க முடியாமல் தவித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தவெகவினர் உரிய மரியாதை வழங்குவதில்லையெனவும் வேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது.

பல்டி அடிக்க யோசிக்கும் அதிமுக மாஜிக்கள்

அரசியலில் சீனியர் என்ற மரியாதை கூட தவெகவில் இருப்பதில்லை என தனது நெருங்கிய வட்டாரத்தில் கடம்பூர் ராஜூ பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் போன்றவர்களும் வீட்டிற்குள் இருந்தே அரசியல் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தவெகவில் இணைந்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் எந்த பொறுப்பும் அதிமுக மாஜிக்களுக்கு வழங்கப்படாத காரணத்தால் புதிதாக தவெகவில் இணைய காத்திருந்த அதிமுக மூத்த நிர்வாகிகள் பின்வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article