விழுப்புரம் : திண்டிவனம் வட்டம் வீடூர் அணையின் கதவுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டேரிப்பட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (09.07.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வீடூர் அணையின் கதவுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பிக்கும் பணி

மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவிக்கையில்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம், வீடூர் கிராமத்தில் அமைந்துள்ள வீடூர் நீர்த்தேக்கமானது வராகநதி மற்றும் தொண்டியாறு ஒன்று சேருமிடத்தில் அமையப்பெற்றுள்ளது. நீர்தேக்கத்தின் நீர்பரவல் பகுதி 7.77 சதுர கி.மீ மற்றும் நீர் பிடிப்பு பகுதி 1298 சதுர கி.மீ ஆகும். அணையின் மொத்த நீளம் 4511 மீ. இந்த நீர்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 605 மில்லியன் கன அடி, நீர்தேக்கத்தின் உயரம் 32 அடி ஆகும்.

அணையில் மிகை நீர் போக்கிகள் 9 எண்ணிக்கையும், கூடுதல் மிகை நீர் போக்கிகள் 3 எண்ணிக்கையும் உள்ளது. இந்த 12 மிகை நீர் போக்கிகள் மூலம் 1,26,144 கன அடி/ வினாடி தண்ணீர் வெளியேற்றும் திறன் கொண்டவை. இந்த நீர்தேக்கத்தின் பிரதான பாசன கால்வாயின் நீளம் 17.640 கி.மீ. இதில் 16.305 கி.மீ தமிழக எல்லையிலும் 1.335 கி.மீ புதுச்சேரி மாநிலத்திலும் அமைந்துள்ளது. பாசன கால்வாயின் தண்ணீர் வெளியேற்றும் திறன் 125 கன அடி/ வினாடி ஆகும்.

அணை உருவாக்கப்பட்டு 65 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அணையின் எண்.1 முதல் 9 கசிவு பாதை செங்குத்து கதவுகள் ஆற்றின் மணற்போக்கிகளை சீரமைப்பதில் சிரமம் ஏற்பட்டதை தொடர்ந்து, ரூ.38.36 கோடி மதிப்பீட்டில் வீடூர் அணையின் கதவுகள் எண்.1 முதல் 9 வரை கசிவு பாதை செங்குத்து கதவுகள் வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் அமைத்தல், கூடுதல் கதவுகள் எண்.1 முதல் 3 வரை உள்ள ரேடியல் கதவுகளை சரிசெய்தல் மற்றும் புதுப்பித்தல், அவசரகால கதவு மற்றும் கேன்ட்ரி ஏற்றுதல் மற்றும் ஆற்றின் மணற்போக்கிகளை மாற்றுதல் மற்றும் வீடூர் கால்வாய் தலைப்பு மதகு இயக்க முறைகளை மாற்றியமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், இன்றையதினம் திண்டிவனம் வட்டம் வீடூர் அணையின் கதவுகள் சீரமைத்தல் மற்றும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூட்டேரிப்பட்டில், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை, செயற்பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர்கள் ஐயப்பன், பாலாஜி, வீடூர் அணை இளநிலைப் பொறியாளர் பாபு, திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் ரமேஷ் உட்பட பலர் உள்ளனர்.

Source: Read Full Article