" சர்க்கரை ஆலைக்கு கெமிக்கல் லோடு "

வேலூர் மாவட்டம் வேலப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் ( வயது 50). இவர் வேலூர் மாவட்டம் பெருமுகை பகுதியை சேர்ந்த சுரேந்தர் மகன் பிரேம்குமார் ( வயது 39 ) என்பவருக்கு சொந்தமான லாரியில் கடந்த 2024 முதல், டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடன் வசந்தகுமார் ( வயது 25 ) என்பவர் கிளீனராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 3 - ம் தேதி மங்களூரில் இருந்து கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு கெமிக்கல் லோடு ஏற்றிக் கொண்டு இருவரும் வந்துள்ளனர். ஆனால் 3 நாட்கள் காலதாமதமாக ஏற்றிச் சென்று லோடு இறக்கியதாக கூறப்படுகிறது.

இரும்பு ராடால் அடித்து கொலை

ராதா கிருஷ்ணன் லாரியை எடுத்துக் கொண்டு வேலூர் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் செஞ்சி வீரன் சிலை அருகே லாரியை டிரைவர் ராதாகிருஷ்ணன் நிறுத்திய போது, திடீரென அங்கு வந்த லாரி உரிமையாளர் பிரேம் குமார், 3 நாட்கள் காலதாமதமாக சென்று வந்ததால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டிரைவரை திட்டியுள்ளார். அதன் பிறகு பிரேம் குமார், மது வாங்கி வந்து ராதாகிருஷ்ணன், கிளீனர் வசந்தகுமார் ஆகியோருடன் சேர்ந்து அப்பகுதியில் மது அருந்தியுள்ளார்.

அப்போது போதையில் இருந்த பிரேம்குமார், ராதா கிருஷ்ணனிடம் மீண்டும் இவ்விவகாரம் தொடர்பாக கேட்டு அவரை அசிங்கமாக திட்டவே , 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த பிரேம்குமார் , அருகில் இருந்த இரும்பு ராடை எடுத்து ராதா கிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழவே, கிளீனர் உதவியுடன் உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேம்குமார் கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி வேலூரில் உள்ள ராதாகிருஷ்ணனின் மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் ஆஜர்

இதையடுத்து வேலூர் மருத்துவமனைக்கு சென்று தனது கணவர் ராதாகிருஷ்ணனின் உடலை பார்வையிட்ட மனைவி ரோகிணி, பின்னர் செஞ்சி காவல் நிலையத்தில் மாலை புகார் அளித்தார். அதன் பேரில் லாரி உரிமையாளர் பிரேம் குமார் மற்றும் கிளீனர் வசந்த குமார் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிந்த போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து நடத்திய விசாரணையில், காலதாமதமாக சரக்கு இறக்கி வந்த ஆத்திரத்தில் அவரை இரும்பு ராடால் அடித்துக் கொலை செய்ததை பிரேம்குமார் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து 2 பேரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source: Read Full Article