Kollidam River: தஞ்சாவூர்: காவிரி டெல்டா பகுதியின் உயிர்நாடியாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணைகள் அமைத்து, மழைக்காலங்களில் வீணாக கடலில் கலக்கும் வெள்ளநீரை சேமிக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்துள்ளது.

35 ஆண்டுகளுக்களாக நிறைவேறாத விவசாயிகளின் கோரிக்கை

கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோரிக்கையை டெல்டா விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், இதுவரை முழுமையான தீர்வு கிடைக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் கருத்துப்படி, கொள்ளிடம் ஆறு என்பது டெல்டா பாசனத்திற்கான நீராதாரம் மட்டுமல்ல; தற்போது 18 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி மக்களின் குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வள ஆதாரமாக விளங்கி வருகிறது. எனவே, எதிர்கால நீர்ப்பற்றாக்குறையை தவிர்க்க புதிய கதவணைகள் அமைப்பது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தப்படுகிறது.

கரிகால சோழன் உருவாக்கிய நீர்ப்பாசன அதிசயம்

காவிரி நீர் மேலாண்மையில் உலகப் புகழ்பெற்ற பொறியாளரான ஆர்தர் காட்டன், மாமன்னன் கரிகால சோழன் கட்டிய கல்லணையை ஆய்வு செய்தபோது அதன் தொழில்நுட்ப திறனை கண்டு வியந்ததாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. நவீன இயந்திர வசதிகள் இல்லாத காலத்திலேயே காவிரி நீரை காவிரி, வெண்ணாறு மற்றும் கொள்ளிடம் என மூன்று முக்கிய ஆறுகளாக பிரித்து, டெல்டா முழுவதும் பாசன வசதி கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கல்லணை உலகின் மிகப் பழமையான மற்றும் சிறந்த நீர்ப்பாசன அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அந்த நீர்மேலாண்மை முறையால் ஈர்க்கப்பட்ட ஆர்தர் காட்டன், மழைநீர் மற்றும் வெள்ளநீரை சேமிக்கும் நோக்கில் காவிரியின் குறுக்கே முக்கொம்பில் மேலணை, கொள்ளிடத்தில் அணைக்கரையில் கீழணை ஆகியவற்றை அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். பின்னர் ஆந்திர மாநிலத்தில் தவளேஸ்வரத்திலும் மிகப்பெரிய கதவணையை உருவாக்கினார்.

121 கி.மீ. நீளத்தில் புதிய கதவணை இல்லை

விவசாயிகள் கூறுகையில், முக்கொம்பு முதல் அணைக்கரை வரை சுமார் 121 கிலோமீட்டர் தூரத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகு மழைநீர் மற்றும் வெள்ளநீரை சேமிக்கும் வகையில் புதிய கதவணைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. இதனால், மழைக்காலங்களில் பெருமளவு தண்ணீர் நேரடியாக கடலில் கலந்துவிடுகிறது. இந்த நீரை சேமிக்க முடிந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, குடிநீர் மற்றும் பாசனத்திற்கும் நீண்டகால பாதுகாப்பு கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

1991 முதல் தொடரும் கோரிக்கை... எப்போதும் நிறைவேறும்

காவிரி டெல்டா விவசாயிகள் கடந்த 1991-ஆம் ஆண்டு முதல், முக்கொம்பு முதல் அணைக்கரை வரையிலான பகுதியில் ஒவ்வொரு 17 கிலோமீட்டருக்கும் ஒரு கதவணை என்ற அடிப்படையில் குறைந்தது 7 புதிய கதவணைகள் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், கொள்ளிடத்தின் இரு கரைகளிலும் உள்ள சுமார் ஒரு லட்சம் ஏக்கர் கூடுதல் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டு கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாத்தியான ஒன்றுதான்... ஆனால் இன்னும் வரலையே

இந்த திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நீர்வள நிபுணர்களுடன் விவசாயிகள் ஆலோசனை நடத்தி, புவியியல், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ரீதியாக திட்டம் சாத்தியமானது என்ற ஆய்வுகளையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடமும் எடுத்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் நாமக்கல் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்பட்டது. அதன் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், விவசாயமும் குடிநீர் வசதியும் மேம்பட்டதாக விவசாயிகள் எடுத்துக்காட்டுகின்றனர்.

நிறைவேறாமல் உள்ள திட்டங்கள்

அணைக்கரைக்கு கிழக்கே குமாரமங்கலம்–ஆதனூர் இடையே உயர்மட்ட பாலத்துடன் புதிய கதவணை அமைக்க முதலில் ரூ.396 கோடி, பின்னர் ரூ.456 கோடி மதிப்பில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான கட்டுமானப் பணிகள் முடிவடைந்திருந்தாலும், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்ட 346 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் பிரச்சினைகள் காரணமாக திட்டம் இன்னும் முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட குடிதாங்கி–ஸ்ரீபுரந்தான் கதவணை திட்டமும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும், வீரமாங்குடி–ஏலாக்குறிச்சி மற்றும் வாழ்க்கை–தூத்தூர் இடையே கதவணை அமைக்கும் திட்டங்கள் குறித்தும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டாலும், அவையும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இத்திட்டங்கள் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

18 மாவட்டங்களின் குடிநீரை பாதுகாக்க வேண்டிய அவசியம்

தற்போது கொள்ளிடம் ஆற்றை நம்பி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் சுமார் 5 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களும் கொள்ளிடம் ஆற்றை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.

அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொள்ளிடத்தில் புதிய கதவணைகள் அமைக்கப்பட்டால், மழைக்காலங்களில் கடலில் கலக்கும் வெள்ளநீரை சேமித்து வைக்க முடியும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, டெல்டா விவசாயம் பாதுகாக்கப்படும். எதிர்கால குடிநீர் தேவைகளையும் சிரமமின்றி பூர்த்தி செய்ய முடியும். எனவே, நீர்வள மேலாண்மையை வலுப்படுத்தும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் புதிய கதவணைகள் அமைக்கும் திட்டங்களை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்பதே டெல்டா விவசாயிகள் மற்றும் நீர்வள ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article