திமுகவின் வரலாற்றுத் திரிபை த.வெ.க அரசும் பின்பற்றக் கூடாது எனவும் தமிழ்நாடு நாள் ஜூலை 18 அல்ல.... நவம்பர் 1-ஆம் தேதிதான் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாளையொட்டி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு தமிழ்மொழியின் பெருமை, தமிழ்நாட்டின் வரலாறு ஆகியவை குறித்து பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும் என்றும், போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு முறையே ரூ.50,000, ரூ.30,000, ரூ.20000 வீதம் பரிசுகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அதன் பெருமைகளை பரப்புவதற்கான இத்தகைய பணிகள் வரவேற்கத் தக்கவை. ஆனால், இவற்றின் மூலம் வரலாற்றைத் திரிக்கும் முயற்சி தொடர்வதை அனுமதிக்க முடியாது.

இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரியாக மாநிலங்களை பிரிக்கக் கோரி போராட்டங்கள் வெடித்தன. அதைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதுவரை இந்தியாவில் 6 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்த நிலையில், அவை பிரிக்கப்பட்டு 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாக்கப்பட்டன.

புதிய சென்னை மாகாணம்

அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு புதிய சென்னை மாகாணமாக அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் கர்நாடகம், கேரளம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் நவம்பர் ஒன்றாம் தேதியைத்தான் முறையே கர்நாடகம் நாள், கேரளம் நாள், ஆந்திரம் நாள், புதுச்சேரி நாள் என்று கொண்டாடி வருகின்றன. அதேபோல், நவம்பர் ஒன்றாம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளா?

தமிழறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் போன்றோரின் கோரிக்கையும் இதுவாகவே இருந்தது. அதையேற்று நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று 2019ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால், 2021ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் சம்பந்தமே இல்லாமல் ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.

தமிழ்நாட்டின் வரலாற்றில் ஜூலை 18ஆம் தேதிக்கு பல சிறப்புகள் உண்டு. ஆனால், தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் தகுதி அந்த நாளுக்கு இல்லை. இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட மாநிலம் 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்ட பின்னர், பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னை மாகாணம் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது.

என்ன நியாயம் உள்ளது?

1967ஆம் ஆண்டில் அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அதே ஆண்டில் சென்னை மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றுவதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு ஜூலை 18ஆம் நாள் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்நாட்டின் நில எல்லைகள் வரையறுக்கப்பட்டது முதல் பெயர் சூட்டப்பட்டது வரையிலான வரலாறு இது தான். இதன்படி பார்த்தால் ஜூலை 18ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாட என்ன நியாயம் உள்ளது?

ஜூலை 18 என்பது தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்ட நாள்தான். ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இது வரலாற்றைத் திரிக்கும் அபத்தமான செயல் ஆகும்.

திமுக ஆட்சியில் தவறான வழிகாட்டுதல் அல்லது உள்நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவெக இப்போது ஆட்சிக்கு வந்த பின்னும் அதே வரலாற்றுத் திரிபை பின்பற்றுவதும், நியாயப்படுத்துவதும் தமிழ்நாட்டின் வரலாற்றுக்கு செய்யப்படும் துரோகம்.

ஏற்க முடியாதவை

தமிழ்நாடு நாள் என்றால் அது நவம்பர் ஒன்றாம் நாள்தான். அதுதான் மக்கள் மனதில் நிலைநிறுத்தப்பட வேண்டும். மாறாக, ஜூலை 18ஆம் நாளை தமிழ்நாடு என்று அழைப்பதும், அதை நிலைநிறுத்தும் வகையில் தவறான வரலாற்றின் அடிப்படையில் பேச்சுப் போட்டிகள் மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்துவதும் ஏற்க முடியாதவை. இந்த அபத்தத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.

தேவைப்பட்டால் தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள், எல்லைப் போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து பேசி தமிழ்நாடு நாள் எது? என்பதை தீர்மானிக்க வேண்டும்; மாணவச் செல்வங்களுக்கு பெருமைமிக்க உண்மை வரலாற்றை போதிக்க வேண்டும் என்று அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

Source: Read Full Article