நகை வசதி எங்களிடம் இல்லை

வேலூர் மாவட்டம் மேல்பாடி அருகே உள்ள சிவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் ( வயது 34 ) இவருக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாததால் , அவரது அண்ணன் ஜெய்சங்கர் , சென்னையில் கட்டுமானத் தொழில் செய்து வந்த நிலையில் , தம்பிக்கு பெண் பார்த்து வந்துள்ளார். அப்போது, ஜெய்சங்கரிடம் பெயிண்டராகவும் , அவ்வப்போது கார் ஓட்டுநராகவும் வேலை செய்து வந்த சென்னை சேர்ந்த முனுசாமி, தனது உறவுக்கார பெண் ஒருவர் இருப்பதாகவும், சிறுவயதில் இருந்து நாங்கள் தான் வளர்த்ததாகவும் கூறியுள்ளார்.

திருமணத்திற்குத் தேவையான நகை உள்ளிட்ட வசதிகள் எங்களிடம் இல்லை என முனுசாமி தெரிவித்த நிலையில் , பெண்ணுக்கும் விருப்பம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அதன் படி, மணமகளுக்குத் தேவையான நகைகள் , திருமணப் பட்டு, திருமணப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் சுமார் ரூ.4 லட்சம் வரை செலவழித்து, கடந்த மாதம் 7-ஆம் தேதி சோளிங்கரில் உள்ள முருகன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் அபிநயா என்ற அந்த பெண்ணிற்கும் அவரது சகோதரர் கஜேந்திரனுக்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

15 நாட்கள் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கை

இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் முனுசாமி மற்றும் அவரது தாயார் ஜோதி மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட நாள் கழித்து தம்பிக்கு திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் , ஜெய்சங்கர் மணமக்களுக்கு தொடர்ந்து குடும்பச் சடங்குகளையும் ஏற்பாடு செய்துள்ளார். ஆனால் , திருமண வாழ்க்கை ஒரே ஒரு நாள் மட்டுமே சுமுகமாக இருந்ததாக கூறப்படுகிறது.

திருமணமான மறுநாளிலிருந்தே அபிநயா , கணவர் கஜேந்திரனிடம் அன்பாகப் பேசாமல் இருந்ததுடன் , எப்போதும் தனது மாமா முனுசாமியுடனேயே அதிகமாக பேசி வந்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். சுமார் 15 நாட்கள் இவ்வாறு பிரச்சினைகளுடன் திருமண வாழ்க்கை நீடித்த நிலையில், ஒரு நாள் நள்ளிரவில் அபிநயா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இதையடுத்து, மேல்பாடி காவல் நிலையத்தில் அபிநயா காணாமல் போனதாக கஜேந்திரன் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட உதவி ஆய்வாளர் குமரன், அவரை கண்டுபிடித்து விடலாம் என்று கூறி அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

என் மாமா உடன் தான் வாழ போறேன்

அபிநயா தனது மாமா முனுசாமியுடன் காவல் நிலையத்தில் ஆஜராகி, " இனிமேல் கஜேந்திரனுடன் வாழப் போவதில்லை. என் மாமா முனுசாமியுடன் தான் வாழப் போகிறேன்" என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக கஜேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முனுசாமியிடம் ஜெய் சங்கர் கேள்வி எழுப்பிய போது , காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் குமரன், அந்த பெண் வரவில்லை என்று சொன்னால் விட்டு விட்டு போக வேண்டியது தானே என்று கூறி, தங்களிடம் ஆபாசமாகவும் தரக் குறைவாகவும் பேசியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் அங்கு நியாயம் கிடைக்காது என கருதிய கஜேந்திரன், தனது தாயாருடன் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், தன்னை ஏமாற்றி தனது காதலியான அபிநயாவையே திருமணம் செய்து வைத்து மோசடி செய்ததாக கூறி, முனுசாமி, அபிநயா மற்றும் முனுசாமியின் தாயார் ஜோதி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருமணத்திற்காக செலவிட்ட ரூ.4 லட்சம், நகைகள் மற்றும் திருமணப் பொருட்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்

Source: Read Full Article