கூடுதல் கண்காணிப்பு அவசியம்

வீடு , மனை போன்ற சொத்து வைத்துள்ளவர்கள் அதை விற்க வேண்டும் என்று திட்டமிடும் நிலையில் உடல் நிலை , வயது மூப்பு போன்ற காரணங்களால் நேரடியாக பங்கேற்க முடியாது.

இத்தகைய சூழலில், தனது சார்பில் சொத்து விற்பனையில் நேரில் ஆஜராகி கையெழுத்திட இன்னொரு நபரை நியமிக்கலாம். பொது அதிகார ஆவணம் அடிப்படையில் இதற்கான நடைமுறைகளை பின்பற்றி, உரிமையாளர்கள், முகவரை நியமிக்கலாம்.

இதில் சொத்தின் உரிமையாளர் தங்கள் குடும்பத்தில் உள்ள உறவினர் ஒருவரையே பொது அதிகார முகவராக நியமிக்கலாம். இவ்வாறு குடும்ப உறுப்பினரே பொது அதிகார முகவராக நியமிக்கும் போது, அதற்கான கட்டுப்பாடுகளும், கட்டணமும் குறைவு. ஆனால், சொத்தின் உரிமையாளர் வெளியார் பெயருக்கு பொது அதிகாரம் கொடுக்கும் இடத்தில் தான் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.

சொத்து வாங்கும் போது கூடுதல் கவனம்

சில சமயங்களில் சொத்து வாங்கும் நபர்கள், தங்கள் பெயருக்கு கிரைய பத்திரம் பதிவு செய்வதால் ஏற்படும் செலவுகளை குறைக்க, தற்காலிக ஏற்பாடாக பொது அதிகாரம் பெறுகின்றனர்.

இவ்வாறு பொது அதிகாரம் பெற்ற நபர்கள் அந்த சொத்தை சில ஆண்டுகளில் வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர். இவ்வாறு, வணிக நோக்கத்தில் பொது அதிகார வழிமுறையை பின்பற்றுவோரை தடுப்பது பதிவுத் துறை அதிகாரிகளின் பொறுப்பு ஆகும்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை தங்கள் பெயருக்கு கிரையம் பெறாமல், பொது அதிகாரத்தை பெற்று, மேம்படுத்தி விற்பனை செய்கின்றன. உரிமையாளர், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு இதில் என்ன நோக்கம் இருந்தாலும், சொத்து வாங்கும் நபர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

பொது அதிகாரம் - சட்ட சிக்கல்

எடுத்துக்காட்டாக , நீங்கள் ஒரு நபரிடம் சொத்து வாங்கும் போது அவர் உரிமையாளர் என்று தன்னை சொல்லிக் கொள்வார். சற்று ஆழமாக விசாரிக்கும் போது தான், அவர் பொது அதிகாரம் பெற்ற முகவர் என்ற விபரம் வெளியில் வரும்.

இதில் சொத்துக்கான விலையில் முழு தொகையையும் செலுத்தி பொது அதிகாரம் பெற்றவர்கள் தங்களை உரிமையாளர்கள் என்று சொல்லிக் கொள்கின்றனர். ஆனால் சொத்து வாங்கும் நபர்கள் பொது அதிகாரம் பெற்றவர் யார் , உரிமையாளர் யார் என்பது போன்ற விஷயங்களை விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக பொது அதிகார ஆவணம் உயிருடன் இருக்கிறதா , அதில் உள்ள நிபந்தனைகள் என்ன என்பது போன்ற விஷயங்களை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். சட்டப்படி செல்லத்தக்க நிலையில் உள்ள பொது அதிகார ஆவணத்தை மட்டுமே சொத்து வாங்குவோர் நம்ப வேண்டும்.

உரிமையாளர் குறிப்பிட்ட நிபந்தனைகள் மீறப்பட்ட நிலையில் உள்ள பொது அதிகார ஆவணத்தை நம்பி சொத்து வாங்கினால் சட்ட சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்கின்றனர் ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்கள்

Source: Read Full Article